பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உடற்கல்வி, ஓவியம், இசை, தோட்டக்கலை என 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் காலமுறை ஊதியம், போனஸ், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி, இறந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம், ஓய்வூதியம், நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளி கல்வித்துறை வளாகத்தில் கடந்த ஜனவரி 8ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 11 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘முதல்வரின் அறிவுறுத்தலின்படி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
எஸ்எஸ்ஏ திட்டத்தில் ரூ.3,548 கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டியுள்ளது. மத்திய அரசு இதைத் தர மறுத்தாலும் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த அரசு உறுதுணையாக இருந்து செலவினங்களை ஏற்று செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் ஆசிரியர்களின் போராட்டம் எனக்கு கனத்த இதயத்தை தருகிறது என்று முதல்வரிடம் கூறினேன்.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மகிழ்ச்சி என்பது வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல் உண்மையாகவே அவர்களுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்பதற்காக பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுகிறது.
ஊதியம் மேலும் ரூ.2500 உயர்த்தப்பட்டு பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.15,000 வழங்கப்படும்.
அதுபோன்று பணி நிரந்தரம் என்பது பகுதி நேர ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
