’அனிருத்துக்கு மாற்று இவர் தான்’, ‘ஜென்ஸீக்கும் அடுத்த தலைமுறையினர் மனதில் இடம்பிடித்தவர்’ என்று எங்கும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பற்றிய பேச்சுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ’கட்சி சேர’ சிங்கிளில் தொடங்கி ‘ஆச கூட’, ‘சித்திர புத்திரி’, ‘விழி வீக்குற’ எனத் தொடர்ந்து அவரது தனிப்பாடல்கள் யூடியூபில் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. சம்யுக்தா விஸ்வநாதன், ப்ரீத்தி முகுந்தன், மீனாட்சி சௌத்ரியுடன் அவர் போட்ட ஆட்டமும் இளம் ரசிகர்களால் சிலாகிக்கப்படுகின்றன.
இந்தச் சூழலில்தான், சாய் அப்யங்கர் இசையமைக்கிற படங்களின் டைட்டில் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.
பிரதீப் ரங்கநாதனின் ‘டூட்’, சூர்யாவின் ‘கருப்பு’, ராகவேந்திரா லாரன்ஸின் ‘பென்ஸ்’, கார்த்தியின் ‘மார்ஷல்’, எஸ்டிஆர் 49, அல்லு அர்ஜுன் – அட்லீ படம் ஆகியன பற்றிய தகவல்கள் மொத்தமாகக் குவியத் திரையுலகமே ஆடிப் போனது.
’முதல் படம் கூட வெளிவராத நிலையில், இத்தனை பட வாய்ப்புகளா’ என்று திகைத்தது. ஆனால், அப்படங்களின் அறிமுக வீடியோக்களுக்கு சாய் அமைத்த இசை அவர்களை வாய் மூடச் செய்தது.
இந்த நிலையிலேயே, இந்த அறிவிப்புகளை ஓரம் கட்டும்விதமாக ‘பல்டி’ அமைந்தது. ஓணம் வெளியீடாக வரவிருக்கும் இப்படத்தில் ஷேன் நிகம், ப்ரீத்தி அஸ்ரானி, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ள இப்படம் மலையாளம், தமிழில் வெளியாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
சாய் அப்யங்கர் மலையாளத்தில் அறிமுகம் ஆகிறார் என்று மோகன்லால் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானதுதான் தாமதம். அடுத்தடுத்து அப்படம் குறித்து பல அப்டேட்கள் வந்தாகிவிட்டது.
இதோ இப்போது, அதில் இருந்து ‘ஜாலக்காரி’ பாடல் வந்திருக்கிறது. இதுவே சாய் அப்யங்கரின் இசையில் வெளியாகும் முதல் சினிமா பாடல்.
கேட்டவுடனேயே பிடித்துப் போகிற வகையில் இது அமைந்துள்ளது என்பதை முதல்முறை கேட்ட எவரும் ஒப்புக்கொள்வர். ‘மலையாளம் புரியலையே’ என்பவர்கள் கூட இப்பாடலின் இசைக்கு மதி மயங்குவது உறுதி.
ஆக, கதகதப்பான கைகுலுக்கல்களைப் பெறும் வகையில் களமிறங்கியிருக்கிறார் சாய் அப்யங்கர். வெல்கம் ப்ரோ..!