தன்னாட்சியா தணிக்கையாட்சியா? சாகித்ய அகடமி விருதுகள்: முடக்கப்பட்டதற்கும் விடுவிக்கப்பட்டதற்கும் இடையே…

Published On:

| By Minnambalam Desk

அ. குமரேசன் 

சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்படுகையில் விமர்சனங்களும் வந்ததுண்டு. இன்னாருக்கு ஏன் இந்த விருது, குறிப்பிட்ட புத்தகம் தகுதி வாய்ந்ததுதானா… இப்படியான கேள்விகள் எழுந்ததுண்டு. இந்த முறை முற்றிலும் மாறுபட்ட  கண்டனம் ஒலித்தது. 

ADVERTISEMENT

நடுவர்கள் இறுதிப்படுத்தி, கடந்த டிசம்பர் 18 அன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட இருந்த விருதாளர்கள் பட்டியலை வெளியிடுவதற்கு ஒன்றிய பாஜக அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம் முட்டுக்கட்டை போட்டதால் அந்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

சிலருடைய பெயர்கள் நீக்கப்படுமா, ஆட்சியாளர்களுக்கு உவப்பில்லாத கொள்கைகள் கொண்டவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குத் தடை விதிக்கப்படுமா, குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் இலக்கியம் எழுதுகிறவர்களுக்கு மட்டுமே இனி இந்த விருது என்று நடைமுறைப்படுத்தப்படுமா என்ற ஐயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. மூன்று மாதங்களுக்குப் பிறகு இப்போது (மார்ச் 16) சாகித்ய அகடமி அதிகாரப்பூர்வமாக, விருதாளர் பட்டியலை எந்த மாற்றமும் இல்லாமல் அறிவித்தது. இடையில் என்ன நடந்தது?

ADVERTISEMENT

தன்னாட்சிக் குரல்

சுதந்திர இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் பன்முகப் பண்பாட்டிற்கும் இலக்கியம் ஒரு தலையாய பாலம் என்ற எண்ணத்துடன் 1954 மார்ச் 12 அன்று ஏற்படுத்தப்பட்டதுதான் சாகித்ய அகடமி. அப்போது இந்திய அரசமைப்பு சாசனத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றிருந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, மராத்தி, வங்காளம், பஞ்சாபி, ஒடியா, அசாமி, சமஸ்கிருதம் ஆகிய 12 மொழிகளில் மட்டும் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

உருது, காஷ்மீரி மொழிகள் 1956இல் சேர்க்கப்பட்டன.  பின்னர் ஆங்கிலம், சிந்தி, மைதிலி, ராஜஸ்தானி, கொங்கணி, மணிப்புரி, நேபாளி, போடோ, சந்தாலி, டோக்ரி ஆகிய 10 மொழிகள்  சேர்க்கப்பட்டு, மொத்தம் 24 மொழிகளின் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மொழிக்குமான நடுவர் குழுக்கள் கூடி விருதுக்குரியவரைப் பரிந்துரைக்கும். அகடமி செயற்குழு இறுதிப் பட்டியலை வெளியிடும். 

முதல் பிரதமரும் இலக்கிய ஈடுபாடு கொண்டவருமான ஜவஹர்லால் நேரு இதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார். அரசின் நிதியுடன்தான் நிறுவனம் செயல்படும் என்றாலும் அதன் முடிவுகளில் அரசு எவ்வகையிலும் தலையிடாது என்று உறுதிப்படுத்தினார். அதற்கேற்ப, ஒரு ‘‘தன்னாட்சி  சங்கம்”’ என்றே அகடமி பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ் பெற்ற கன்னட எழுத்தாளரும், பிற்காலத்தில் ஞானபீட விருது பெற்றவருமான சிவராம கரந்த், தன்னாட்சி பெற்ற அமைப்பிற்கு எதற்காக பிரதமர் தலைமை தாங்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார். முழுக்க முழுக்க இலக்கியவாதிகளே அகடமியின் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். வேறு பல எழுத்தாளர்களும் அதை எதிரொலித்தார்கள். நேருவின் மறைவுக்குப் பிறகு குறுகிய காலம் லால்பகதூர் சாஸ்திரி தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் அகடமியின் தலைவராகவும் செயல்பட்டார். 

அரசியல் பொறுப்பில் இல்லாதவர்களின் தலைமையில் அகடமி இருந்தால்தான் அது தலையீடுகளும் பாகுபாடுகளும் இல்லாமல் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று வலியுறுத்தப்பட்டது. 1967இல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, இலக்கியவாதியே தலைவராக இருப்பார் என புதிய விதி உருவாக்கப்பட்டது. அந்தத் தகுதியுடன் முதல் தலைவராக எழுத்தாளரும் கல்வியாளருமான சுனிதி குமார் சட்டர்ஜி பொறுப்பேற்றார்.  அன்றிலிருந்து இந்த நடைமுறையே தொடர்கிறது.

கைப்பற்றப்பட்ட பட்டியல்

கடந்த டிசம்பர் 18ல், 2025ஆம் ஆண்டுக்கான பட்டியலை ஒன்றிய அமைச்சகம் நிறுத்திவைத்தது. அறிக்கையைப் பெற்றுச் செய்தியாக்குவதற்காக ஊடகவியலாளர்கள், அகடமியின் கூட்ட அரங்கில் கூடியிருந்தபோது, நிகழ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, அமைச்சகத்திலிடமிருந்து தனது ஒப்புதல் இல்லாமல் பட்டியலை வெளியிடக்கூடாது என்று ஆணை வந்தது. செய்தியாளர்களுக்கு அதுவே செய்தியானது.

நிதி வழங்கும் இடத்தில் இருக்கிற அமைச்சகம், அகடமியுடன் 2025 ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது, அகடமி செயல்பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்வதே அதன் நோக்கம் என்று காரணங்கள் கூறப்பட்டன. தன்னாட்சி அமைப்பு என்றாலும், அரசின் நிதியில் இயங்குவதால் அதன் பணிகளை ஆய்வு செய்ய இத்தகைய ஒப்பந்தம் தேவைப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், ஜனநாயக வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டே, எங்கும் எதிலும் ஒற்றை அதிகாரத்தைப் புகுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியே இது என்று அரசியல், இலக்கியம், ஊடகம். சமூகம் ஆகிய களங்களில் செயல்படுவோர் கடுமையாக விமர்சித்தார்கள். ஜூலையிலேயே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது, ஆனால் இறுதிப் பட்டியல் தயாராகி  வெளியிடப்படவிருந்த கடைசி நேரத்தில்தான் அது நினைவுக்கு வந்ததா என்று கேட்டார்கள். 

விருதுப் பட்டியலுக்கு அமைச்சக ஒப்புதலைப் பெற வேண்டும், அரசின் நிதி பெறும் தன்னாட்சி அமைப்புகள் ஒரே விதமான விதிகளின் கீழ் செயல்பட வேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது.  விருதுகளுக்கான  தேர்வு முறையை இன்னும் ‘முறைப்படுத்த’ விரும்புவதாக அமைச்சகம் தெரிவித்ததாம். அதாவது, விருது பெறுபவர்களின் தகுதிகள், தேச நலன் சார்ந்த பார்வைகள் ஆகியவற்றை அமைச்சகம் ஒருமுறை ‘சரிபார்க்க’  விரும்பியதன் விளைவே இந்த ஒப்பந்தம் என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இப்படியான நிபந்தனைகளை விதித்துவிட்டு பிறகு எப்படி தன்னாட்சி அமைப்பு என்று கூறுவதோ தெரியவில்லை.

உண்மை நோக்கம்

மாதவ் கௌஷிக்

அகடமியின் தற்போதைய தலைவரான மாதவ் கௌஷிக் புகழ்பெற்ற இந்திக் கவிஞர். அவர் தலைமையிலான செயற்குழு,  அகடமி செயல்பாடுகள் சுதந்திரமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியதாகத் தெரிகிறது. அகடமி தேர்தலில் பாஜக ஆதரவாளராக அறியப்பட்ட மல்லேபுரம் ஜி. வெங்கடேஷ் என்பவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கௌஷிக். அமைச்சகம் தற்போது மாற்றமின்றி பட்டியலை ஏற்றுக்கொள்ளச் செய்ததில் இவரது விடாமுயற்சி இருந்ததாக் கூறப்படுகிறது. அதே வேளையில், இன்னும் வலுவாகக் கையாண்டிருக்க வேண்டும், ஒப்பந்தம் பற்றி மக்கள் கவனத்திற்கு உடனே கொண்டுவந்திருக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.

கருத்துச் சுதந்திர மேன்மைகளை நம்புகிறவர்கள் இன்னொரு கவலையையும் வெளிப்படுத்தினார்கள். அமைச்சகத்தின் நோக்கம், யாருக்கு விருது என்று “சரிபார்ப்பதை” விட, எதை எழுதினால் இனிமேல் விருது வழங்கப்படும் என்று சொல்லாமல் சொல்வதுதான் என்று கூறுகிறார்கள். அதாவது ஆட்சியாளர்களின் நோக்கங்களுக்குச் சாதகமாகவும், அவற்றுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையிலும் எழுதப்படும் நூல்களுக்கே விருது என்று கொண்டுவருவதற்கான ஒரு முன்னோட்டமாக இது இருக்குமோ என்று விசனத்தொடு கேட்கிறார்கள். ஒன்றியத்தில் நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஆனால் இதே போக்கு தொடருமானால், அப்போதும் இது ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்குத் தடையாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

அமைச்சகத்தால் நிறுத்திவைக்கப்பட்ட பட்டியல், ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், மூன்று மாதங்கள் கடத்தப்பட்ட  பின்னரே, செயற்குழு அதை வெளியிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஏற்கெனவே அகடமி முடிவு செய்திருந்த நூல்களோ படைப்பாளிகளோ மாற்றப்படவில்லைதான். இது வரவேற்கத்தக்கதே. ஆயினும்  அடுத்து வரும் ஆண்டுகளில் பெயர்கள் மாற்றப்பட மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

தமிழ்ச் செல்வன் அறிவிப்பு

தமிழ் மண்ணின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், வளரும் எழுத்தாளர்களுக்கு ஊக்க சக்தியாகத் திகழ்பவருமான ச. தமிழ்ச்செல்வன் விருது பெறுகிறார். “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” என்ற சிறந்ததோர் ஆய்வு நூலுக்காக இந்த விருதினைப் பெறுகிற அவர், ‘வெயிலோடு போய்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘பெண்கள் ஏன் படிக்க வேண்டும்’, ‘அரசியல் பழகு’ என்பன உள்ளிட்ட சமூக உரையாடலுக்கான புத்தகங்கள் என பல ஆக்கங்களை வழங்கியிருக்கிறார். அண்மையில், தஞ்சை மண்ணின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடைய வீரஞ்செறிந்த போராட்ட வரலாற்றைக் கூறும் ‘திருப்பி அடித்த கதை’ என்ற முக்கியமான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

அகடமியின் டிசம்பர் கூட்டத்தில் அவர் பெயர் அறிவிக்கப்படும் என்ற  செய்தி பரவி, பலரும் வாழ்த்தத் தொடங்கிய நிலையில்தான் பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டது. இனிமேல் அரசாங்கமே விருதுகளை வழங்கும் என மாற்றப்படலாம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருந்தது. அப்போது அவர், “மறுபடியும் எனக்கு விருது அறிவிக்கப்படுமானால் அதை அகடமி கொடுத்தால்தான் பெற்றுக் கொள்வேன், அரசாங்கம் கொடுத்தால் ஏற்க மாட்டேன்,” என்று அறிவித்தார். பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுத்த நிகழ்வுகள் உண்டு. ஆனால், அரசு கொடுத்தால் ஏற்க முடியாது என்ற முழக்கம் எழுந்தது இதுவே முதல் முறை.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இது ஒரு மறைமுகத் தணிக்கை என்று குறிப்பிட்ட அவர், “இலக்கியம் என்பது அதிகாரத்தின் நிழலில் வளர வேண்டிய ஒன்றல்ல. ஒரு தன்னாட்சி பெற்ற இலக்கிய அமைப்பின் முடிவுகளை அமைச்சகம் சரிபார்ப்பது என்பது படைப்பாற்றலைச் சிறைபிடிக்கும் முயற்சி” என்று கண்டித்தார். பல அரசியல் இயக்கங்களும்  கண்டனம் தெரிவித்தன.

செம்மொழி இலக்கிய விருது

இதற்கிடையே, தமிழக அரசே தேசிய அளவிலான விருதினை உருவாக்கி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஜனவரி 18 அன்று, சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவில், “செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும்” என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி ஆகிய 7 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படும். ஒவ்வொரு மொழி படைப்புக்கும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் (சாகித்ய அகடமி அளிக்கும் பரிசுத் தொகை 1 லட்சம் ரூபாய்தான். தொகையைவிட மதிப்பானதாக அது நாடே அளிக்கும் கௌரவமாகக் கருதப்படுகிறது).

“அரசியல் தலையீடுகள் இன்றி, அந்தந்த மொழி சார்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட ஒரு தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழு  விருதாளர்களைத் தேர்வு செய்யும். தமிழக அரசு வெறும் புரவலராக மட்டுமே இருக்கும்,” என்று அவர் அறிவித்ததில் ஒன்றிய அரசுக்கு ஒரு செய்தி இருக்கிறது அல்லவா?

இந்நிலையில் இப்போது அகடமிதான் விருதுப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. மலையாளத்தில் என். பிரபாகரன் (மாயா மனுஷ்யர்), தெலுங்கில் நந்தினி சிதா ரெட்டி (அனிமேஷா), இந்தியில் மம்தா காலியா (ஜீத்தே ஜீ அலகாபாத்), ஆங்கிலத்தில் நவ்தேஜ் சர்னா (கிரிம்சன் ஸ்பிரிங்) உள்பட 24 எழுத்தாளர்கள் விருது பெறுகிறார்கள்.

நிச்சயமாக இந்தச் செய்தி மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். பட்டியல் நிறுத்தப்பட்ட டிசம்பர் 18, வெளியிடப்பட்ட மார்ச் 16 இரண்டுக்கும் இடையே இத்தனை நாட்களில் என்ன அரசியல் நடந்தது? என்ன சரிபார்க்கப்பட்டது? பட்டியலில் கை வைக்காமல் அப்படியே வெளியிட ஒன்றிய அரசு அனுமதித்தது ஏன்? தேர்தல் நேரத்தில் சர்ச்சைகளைத் தவிர்க்கும் நோக்கமா? ஒப்பந்தத்தைச் சாக்கிட்டுத் தன்னால் என்ன செய்ய முடியும் என்று காட்டிவிட்டதால், இந்த முறை மாற்றமின்றி அறிவிக்க அனுமதித்துவிட்டு, இனி வரும் ஆண்டுகளில் தலையீட்டு விளையாட்டுகளை வைத்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை உத்தியா? இந்த வினாக்களுக்கெல்லாம் விடைகள் கிடைக்காமலா போய்விடும்? நாட்டு மக்கள் அந்த விடைகளை சரிபார்க்கத்தானே செய்வார்கள் – தங்களின் ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து மொழி படைப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்காக.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share