மாநில அரசு வழங்கி வந்த பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். Sagayam IAS fears for life
மதுரை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ள சகாயம், கடந்த 2014-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி சட்ட ஆணையராக இருந்து கிரானைட் குவாரிகளில் நடந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தார்.
அவர் தாக்கல் செய்த 600 பக்க அறிக்கையில் கிரானைட் குவாரிகளில் ஒரு லட்சம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை கனிமவள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேரில் ஆஜராக முடியாது என்று சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு சகாயம் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சகாயம் எழுதியுள்ள கடிதத்தில்,
“மாநில அரசு எனக்கு வழங்கிவந்த பாதுகாப்பை விலக்கிவிட்டது. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக வாய்ப்பில்லை. இதனை நீதிபதியிடம் தெரிவிக்க வேண்டும்.
கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கடந்த கால செயல்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் எனது பாதுகாப்பு விலக்கப்பட்டது தவறானது, மிகவும் ஆபத்தானது. பாதுகாப்பை விலக்கும் முடிவை எடுத்தவர்கள், எனக்கு இருக்கும் அச்சுறுத்தல் பற்றி புரிந்துகொள்ளவில்லை.
சமீபத்தில் புதுக்கோட்டை ஜெகபர் அலி, நெல்லை ஜாகிர் உசேன் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சமூகத்திற்காக நிற்கும் மனிதனை பாதுகாக்க வேண்டியது சமூகத்தின் கடமை.
நான் சட்ட ஆணையராக இருந்தபோது எனக்கு இரண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. என்னை வெட்டி கனிம சுரங்கத்தில் வீசிவிடுவோம் என்று மிரட்டினார்கள். அந்த புகார் தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சகாயம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஊடகங்களுக்கு சகாயம் அளித்துள்ள பேட்டியில், “ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் பாதுகாப்பை பற்றிக் கூட கவலைப்படாத தமிழக அரசு, எப்படி சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்கும்? பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.