2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருது சாகித்ய அகாடமி. கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுகள் அடிப்படையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.
2025-ம் ஆண்டு சாக்திய அகாடமி விருதுக்கான எழுத்தாளர்களைத் தேர்வு செய்ய அதன் நிர்வாக குழு கூட்டம் டெல்லியில் நேற்று டிசம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் விருதுக்கான எழுத்தாளர்கள் யார் என்பது விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது. நிர்வாக குழு உறுப்பினர்கள் பலரும் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர்.
இது தொடர்பாக எழுத்தாளரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான முனைவர் ரவிக்குமார் எம்.பி. தமது எக்ஸ் பக்கத்தில், “இனிமேல் பாஜககாரர்களுக்கு மட்டும் தான் சாகித்ய அகாடமி விருது? சாகித்ய அகாடமி விருதுகளை அறிவிக்க பாஜக அரசு தடை; அரசாங்கம் ஒப்புதல் அளிப்பவர்களுக்குத்தான் விருது தரவேண்டும் என ஒன்றிய கலாச்சார அமைச்சகம் உத்தரவு ; பாஜகவில் சாகித்ய அகாடமி விருதாளர்கள் அணி உருவாக்கப்படுகிறதா?” என கேள்வி எழுப்பி இது தொடர்பான ஊடக செய்தியையும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சாகித்ய அகாடமி விருது விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“தமிழ் சிறுகதைகளின் தடங்கள்” என்ற நூலுக்காக ச. தமிழ் செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, கலாப்ரியா எழுதிய மவுனத்தின் வயது; பிருந்தா சாரதி எழுதிய முக்கோண மனிதன் உள்ளிட்ட 14 நூல்கள் இந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருதுக்காக தமிழ் மொழியில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
