ADVERTISEMENT

8 எம்பிகள் சஸ்பெண்ட்.. பாதுகாப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்துவோம்- சு. வெங்கடேசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவின் (நரவனே) புத்தகத்தை மேற்கோள் காட்டி பேசத் தொடங்கினார்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் அவரைப் பேச விடாமல் தடுத்ததால், அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதையடுத்து, இன்று சபாநாயகர் ராகுல் காந்தியைப் பேச அனுமதித்த நிலையில், அவர் மக்களவையில் பேசினார். “மக்களவையில் பேசுவது என்னுடைய உரிமை.. நான் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். என்னைப் பேச விடாமல் தடுப்பது ஏன்?” என்று குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து எழுந்த கூச்சல் குழப்பத்தால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இன்று பிற்பகல் அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து எறிந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமரீந்தர் சிங், மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங், ஹிபி ஈடன், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், கிரண்குமார் ரெட்டி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்ததைக் கண்டித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சு. வெங்கடேசன் எம்பி தனது எக்ஸ் பதிவில், “மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாதமரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக நான் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளோம். தேசபாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது.

ADVERTISEMENT

பள்ளிக்கூடத்தை நடத்துவதைப் போல பாராளுமன்றத்தை நடத்த நினைக்கிறது பாஜக. நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அலட்சியத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம். அனைத்தையும் விட மேலானது நாடாளுமன்ற ஜனநாயகம். அதனைச் சீர்குலைக்க நினைக்கும் பாஜகவின் அரசியலை முறியடிப்போம்.” என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share