எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. தவெகவினர் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
கோவையில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற என்டிஏ கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “புதிதாகக் கட்சி ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கடந்த 10 நாட்களாக வெளியே வரவில்லை. இப்போதுதான் வந்திருக்கிறார். மக்கள் இதை ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள்.
விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு போய்விடுகிறார். என்ன கொள்கை உங்களுக்கு? திமுகவை விமர்சனம் செய்தால் ஓட்டு பிரிந்து போகும், திமுக வெற்றி பெறும். இதுதான் கொள்கையா?
ஒரு ஓட்டு கூட மற்ற கட்சிக்குப் போகக்கூடாது. அதிமுகவின் வாக்குகள் அனைத்தும் பதிவாக வேண்டும்.கட்சி வேறு, சினிமா வேறு. கேமரா முன்பு நடிப்பது வேறு என்பதை விஜய் உணர வேண்டும்” என்றார்.
மேலும், “கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர் கரூருக்குக் கூட செல்லவில்லை. உயிருக்கு போராடியவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குக் கூட செல்லவில்லை. சொந்தக் கட்சியினரையே காப்பாற்ற முடியாதவர், மக்களை எப்படிக் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் “எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. தவெகவினர் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறப் போவதில்லை. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களைப் பிரித்து திமுகவிற்கு சப்போர்ட் செய்து விடுவார்கள். அத்தனை ஓட்டுக்களும் இரட்டை இலை சின்னத்துக்கு வர வேண்டும்” என தெரிவித்தார்.
