ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உருவான சுனாமி பேரலைகள் (Tsunami), ஜப்பான் நாட்டை தொடர்ந்து அமெரிக்காவையும் தாக்கி இருக்கிறது.
பசிபிக் பெருங்கடலில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கத்தால் காம்ச்சாட்கா தீபகற்பத்தில் பல அடி உயர சுனாமிப் பேரலைகள் உருவாகின. இதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன.
ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனால் உருவான சுனாமிப் பேரலைகள் தாக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலை ஒட்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டன. ஜப்பானின் ஹொக்கைடோ, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாகாணங்கள், ஹவாய் தீவுகள், சீனாவின் சில கடற்கரை பகுதிகள் என பரந்துபட்ட அளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானின் சில கடற்கரை பகுதிகளில் சுனாமி பேரலைகள் தாக்கின; இந்த பேரலைகள் தொடர்ந்தும் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு ஜப்பான் கடற்பரப்பில் 4 முதல் 5 அடி உயரத்துக்கு சுனாமிப் பேரலைகள் தாக்கின.
ரஷ்யாவின் நிலநடுக்கத்தால் உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலைகள் அமெரிக்காவின் கலிபோர்னியா, வாஷிங்டன் கடற்கரை பகுதிகளையும் தாக்கியது. இப்பகுதிகளில் கடலில் சுமார் 2 அடி உயரத்துக்கு ஆக்ரோஷமான சுனாமி பேரலைகள் தாக்கின.
ஹவாய் தீவுகளையும் சுனாமி பேரலைகள் தாக்கின. அங்கு சுமார் 5 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் உருவாகின. ஹவாய் தீவுகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அமெரிக்காவின் கடற்படை ஈடுபட்டுள்ளது.
சீனாவின் கடலோர பகுதிகளையும் சுனாமி தாக்கக் கூடும் என்பதால் அந்நாடு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல பசிபிப் பிராந்திய கடலோர நாடுகள் அனைத்தும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.