ADVERTISEMENT

RTE ஒதுக்கீடு: பெற்றோர்களுக்கு குட் நியூஸ் : பள்ளி கட்டணத்தை திரும்ப பெற வாய்ப்பு!

Published On:

| By Kavi

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE Act) -இன் கீழ் 2025–26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என இந்த ஆண்டுக்கான கட்டாய உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச, உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில் கல்வி நிதியை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்துக்கு கல்வி நிதியை வழங்க மறுப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்தசூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்.டி.இ நிதி விடுவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்வி சேர்க்கைக்கான அறிவிப்பை இன்று (அக்டோபர் 2) தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “சென்னை உயர்நீதிமன்றம், RTE நிதி ஒதுக்கீட்டை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (Samagra Shiksha) திட்டத்திலிருந்து பிரித்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) அல்லது PM SHRI பள்ளித் திட்ட ஒப்பந்தம் (MoU) என்பனவற்றுடன் நிதி வழங்கல் இணைக்கப்படக் கூடாது என்றும் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மேல்முறையீடு மனு (SLP) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு அறிவிப்பு வழங்கியதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு தன்னுடைய நிதிப் பங்களிப்பை விடுவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 2025–26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

2025–26 கல்வியாண்டிற்கான RTE மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்

சேர்க்கை ஒதுக்கீடு

அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் (LKG / I std) 25% ஒதுக்கீடு.

சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.

சேர்க்கை முறை

அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.

தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை பிரிவுகள்

ஆதரவற்றோர்

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்

மாற்றுப் பாலினத்தவர்

தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்

மாற்றுத் திறனாளிகள்

ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை (Random Selection) பின்பற்றப்படும்.

வசூலித்தக் கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்

RTE தகுதியுடைய மாணவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.

கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.

புகார்களுக்காக பிரத்தியேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share