ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உலகின் முன்னணி தேசபக்தி அமைப்பு 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், அதன் மிகப்பெரிய பங்களிப்பு மனிதனை உருவாக்கும் அதன் நெறிமுறைகளாகும். அதாவது வலுவான மற்றும் துடிப்பான சமூகத்திற்கு அவசியமான சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குதல் ஆகும்.
1925-ம் ஆண்டு டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் அவர்களால் நிறுவப்பட்டதிலிருந்து, ஆர்எஸ்எஸ், பல தலைமுறை இளைஞர்களிடம் வலுவான நீதிநெறி குணத்தை உருவாக்கவும், சமூகத்திற்கு தன்னார்வத்துடன் அவர்கள் சேவை செய்யவும் ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். “சேவையே உயர்ந்த தர்மம்” என்ற குறிக்கோளால் வழிநடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் வெள்ளம், பஞ்சம், பூகம்பம் அல்லது வேறு எந்த பேரிடர்களிலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், அறிவுறுத்தல்களுக்காக காத்திருக்காமல், தன்னலமின்றி தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் எப்போதும் முன்னணியில் நின்றுள்ளனர்.
இந்த சேவை மனப்பான்மை, தேசத்திற்கு ஒரு தனித்துவமான, விலைமதிப்பற்ற பரிசு.
சமூகத்திற்கு ஆர்எஸ்எஸ் தொடர்ந்து சேவை செய்வதற்கும், தேச ஒற்றுமை, நல்லிணக்கம், முன்னேற்றம் என்ற அதன் உன்னத நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் வாழ்த்துகள். இவ்வாறு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.