ADVERTISEMENT

3 முறை தடை செய்யப்பட்ட RSS நூற்றாண்டு விழா- சிறப்பு தபால் தலை, நாணயம் வெளியிடும் மோடி

Published On:

| By Mathi

Modi RSS

RSS- ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 1) வெளியிடுகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவரால் ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்துத்துவா கொள்கைகள், இந்துராஷ்டிரா (அகண்ட பாரதம்) ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம். மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ்.

ADVERTISEMENT

மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்தும் அவசர நிலை காலத்திலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம், இந்தியாவில் தடை செய்யப்பட்டு பின்னர் அந்த தடைகள் விலக்கப்பட்டன.

இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சிறப்பு தபால் தலை, நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.

ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் குறித்து பிரதமர் அலுவலகம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தன்னார்வலர் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு கலாச்சார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடையே கொண்டு செல்வதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

நாட்டை மறுகட்டமைப்பதற்கான இயக்கத்தில் தனித்துவ மக்களை மையமாகக் கொண்ட அமைப்பாக ஆர்எஸ்எஸ் இருந்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்துள்ள நாட்டின் வளர்ச்சிக்காகவும், தர்மத்தின் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த அமைப்பு தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

நாட்டுப்பற்று மற்றும் தேசியம் குறித்த நற்பண்புகளை உருவாக்குவதையே இந்த அமைப்பு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. தாய் மண்ணின் மீது கொண்டுள்ள பக்தி, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல், தலைமைப்பண்பு போன்ற குண நலன்களை வளர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பில் உள்ள ஒவ்வொரு ஸ்வயம்சேவகர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி, சுகாதாரம், சமூக நலன் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளது. இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் அதன் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளுக்கு மரியாதை செலுத்துவது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சார பயணத்திற்கும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான செய்தியாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share