ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ்.- தேச பக்தி இயக்கமா? வரலாற்று பக்கங்கள் சொல்வது என்ன?- விடுதலை க.இராசேந்திரன்

Published On:

| By Mathi

RSS Viduthalai Rajendran

ஆர்எஸ்எஸ் என்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேக் சங்கத்தின் நூற்றாண்டு (RSS) விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஒரு தேசபக்தி இயக்கம் என்றும் கொண்டாடப்படுகிறது. உண்மையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏன் உருவானது? ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தேசபக்தி இயக்கமா? என்பதை வரலாற்று ஆய்வறிஞரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளருமான விடுதலை க.இராசேந்திரன் எழுதிய இந்த கட்டுரை விவரிக்கிறது.

  • 1925இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ன செய்தது? ‘தேசபக்தி’ இயக்கமாகவா செயல்பட்டது?

1940 ஆம் ஆண்டு, கோல்வாக்கர் ஆர்.எஸ்.எஸ். தலைவராகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை கம்யூனி சத்துக்கும் சோஷலிசத்துக்கும் எதிர்ப்பு அணியாகப் பிரகடனப்படுத்துகிறார்; இந்து பிற்போக்காளர்களை சேர்த்துக்கொண்டு, முஸ்லீம்களின் மீது தாக்குதல் நடத்துவது என்பது இவர் போட்ட திட்டம்.

ADVERTISEMENT

ஆர்.எஸ்.எஸ்.-ல் ஏன் இணைந்தனர்?

1942 ஆம் ஆண்டில் வெள்ளையேன வெளியேறு இயக்கத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது. பல காங்கிரசார் கைது செய்யப்படுகின்றனர். அப்போது கோல்வாக்கர் பல பார்ப்பன இளைஞர்களையும், இந்து இளைஞர்களையும், ஆர்.எஸ்.எஸ்..க்கு இழுக்கும் முயற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். பல நடுத்தரக் குடும்பங்கள், குறிப்பாக பார்ப்பனர்கள் இந்த அமைப்பில் சேருகிறார்கள். பல பார்ப்பன பெற்றோர்களே, தங்கள் வீட்டுப் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்த்தனர்; அதற்குக் காரணம், எங்கே காங்கிரஸ் கட்சிப் போராட்டத்திலே பங்கேற்று இந்த இளைஞர்கள் சிறைக்குப் போய்விடுவார்களோ என்று அஞ்சியது தான்.

ADVERTISEMENT

பிரிட்டிஷ ராணுவமும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும்

பிரிட்டிஷார் ராணுவத்துக்கு ஆள்கள் சேர்த்த போது, அதற்கு பேருதவி செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். பல இந்து இளைஞர்களை பிரிட்டிஷார் ராணுவத்தில் இவர்கள் சேர்த்ததோடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நேரடிப் பங்கு கொண்டிருந்தவர்கள் கூட, ராணுவத்தில் சேர்ந்தனர். “அரசியலை இந்துமயமாக்கு இந்துக்களை ராணுவ மயமாக்கு”என்பன அப்போது இவர்கள் போட்ட கோஷம்.

ADVERTISEMENT

பிரிட்டிஷாரிடம் ஆதாயம் பெற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்

அது மட்டுமல்ல; அதைப் பயன்படுத்திக்கொண்டு சொந்த வியாபாரத்தையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆரம்பித்து விட்டார்கள்.

டிரேவர் டிரய்பர்க் என்ற பத்திரிகையாளர் அதுபற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்;

பல ஆர்.ஏஸ்.ஏஸ். தலைவர்கள் பிரிட்டிஷ் இராணுவத்துக்கு வேண்டிய இராணுவ எந்திரங்களை சப்ளை செய்யும் “காண்ட்ராக்ட்” டுகளை எடுத்தனர். 1943 ஆம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, இருந்த உணவுப் பொருள்களை எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வாரிக் கொண்டு போய் பிரிட்டிஷ் ராணுவத்தினருக்குக் கொடுத்தனர். பஞ்சத்தால் பரிதவித்த மக்கள் மேலும் கொடுமைக்குள்ளாயினர். இந்த காண்ட்ராக்ட்காரர்களிடம் பணம் ஏராளமாக வர ஆரம்பித்தது; பிரிட்டிஷ் ராணுவ நிதிக்குப் பணத்தை அள்ளி வீசினர். (அப்போதுதானே காண்ட்ராக்ட் கிடைக்கும்) ஆர்.எஸ்.எஸ். செய்தித்தாள்களுக்கும் பத்திரிகைகளுக்கும், அரசாங்கம் பேருதவி செய்தது. ஏராளமான அரசு விளம்பரங்கள் தரப்பட்டன. இந்த நடவடிக்கைகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தேசியப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்ற மாயையை உடைத்துக் காட்டுகிறது” – என்று எழுதுகிறார், டிரேவர் டிரய்பர்க் (Drever Drieberg) தமது “Four FacesFour Facesof subversion” என்ற நூலில் (பக்கம் 27)

பம்பாய் பிரிட்டிஷ் கவர்னரிடமிருந்து 1942ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் நன்னடத்தை சர்டிபிகேட்டுகளை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்கின்றனர். புதுடில்லியில் உள்ள மத்திய அரசுக்கு பம்பாய் பிரிட்டிஷ் கவர்னர் கோல்வாக்கரைப் பற்றி ஒரு அறிக்கை கொடுத்தார். அதில் கோல்வாக்கர் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் இயல்பு கொண்டவர் (Wary), தந்திர நுட்பமுடைய கூர்மதியாளர் (Astute). காங்கிரஸ் நடத்திய ஆகஸ்ட் போராட்டத்தில் ஜாக்கிரதையாக ஒதுங்கி இருந்தவர். (Scrupulously kept away)” என்று குறிப்பிட்டிருந்தார். ஆதாரம்: மேற்குறிப்பிட்ட நூலில் பக். 27)

அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் போட்ட உத்தரவுகளை எல்லாம், கோல்வாக்கர் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார். அப்போது ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்த ராணுவப் பிரிவை (militarisation Department) ஒழித்துவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டவுடன், உடனே அந்த உத்தரவை ஏற்று அந்தப் பிரிவை ஒழிக்க முன்வந்தார். ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராணுவப் பயிற்சியையும் நிறுத்தியதோடு சீருடையையும் மாற்றிக் கொண்டனர்; காக்கி சட்டைக்குப் பதிலாக வெள்ளை சட்டையும், தோல் பூட்ஸ்களுக்குப் பதிலாக கேன்வாஸ் செருப்புகளும் அணிந்தனர்; பெரிய பெல்ட் போடுவதையும் எடுத்து விட்டனர்; இத்தனையும், பிரிட்டிஷார் உத்தரவை ஏற்று செய்யப்பட்டதாகும்! ராணுவத்தினர் போலவே, உடையணிந்து, ராணுவப் பயிற்சியையே இவர்கள் – பிரிட்டிஷார் தடை உத்தரவு வரும்வரை ‘இந்து ராஜ்யம்’ நடத்தி வந்திருக்கிறார்கள்.

1942-ல் காட்டிக் கொடுத்த வாஜ்பாய்

அந்த நேரத்தில், வாஜ்பாய் காட்டிக் கொடுக்கும் துரோக வேலையையும் செய்தார்.

1942 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் “தேசபக்த திலகம்” வாஜ்பாய் செய்த வேலை என்ன தெரியுமா?

காட்டிக் கொடுக்கும் வேலை. ஆம். அந்த வேலையைத்தான் வாஜ்பாய் செய்தார்!

1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் வாஜ்பாய் கலந்து கொண்டார். அவரோடு அவரது “புரட்சி” சகாக்களும் கலந்து கொண்டு சிறையேகினர். வெள்ளையனே வெளியேறு போராட்டம் தொடர்பாக நடந்த ஒரு வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. சிறைக்குப் போன வாஜ்பாய் என்ன செய்தார் தெரியுமா? இந்த சம்பவத்தில் கலந்துகொண்டு சிறைப் பிடிக்கப்படாத தனது புரட்சி நண்பர்களின் பெயர்ப் பட்டியலை எல்லாம் போலீசாரிடம் கொடுத்து விட்டு தான் மன்னிப்புக் கேட்டுச் கொண்டு விடுதலை ஆகிவிட்டார்.

இந்த சம்பவம் பற்றி பம்பாயிலிருந்து வெளிவரும் “பிளிட்ஸ்” பத்திரிகை (ஜன. 26, 1974) ஒரு நீண்ட கட்டுரை வெளியிட்டது. அந்த வழக்கின் முழு விவரம், நீதிமன்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும், அந்தக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது.

வாஜ்பாயின் சகோதரர் பிரேம் பிகார் லால் பாஜ் பாய், என்பவர் மத்திய பிரதேச அரசாங்கமே நடத்தும் சந்தேஷ்’ (Sandesh) என்ற பத்திரிகையில் (12.5.1973 இதழில்) இதுபற்றி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அந்தக் கட்டுரையில் தானும் தனது சகோதரர் வாஜ்பாயும் பட்டேஸ்வர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் என்பதையும் வாஜ்பாய் இழைத்த துரோகத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அது மட்டுமா? கிரிஜாஷங்கர் பாஜ்பாய் என்ற பார்ப்பனர் அப்போது வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினர். அவரது தலையீட்டின் பேரில் தான் நாங்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலை பெற்றோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரும், தீவிர ஆர்.எஸ்.எஸ். காரருமான நானாஜி தேஷ்முக் என்பவரும், வேறு சில ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் ‘பிளிட்ஸ்’ ஏடு மீது வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்ட வாஜ்பாய், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவோ, அல்லது ‘பிளிட்ஸ்’ ஏடு மீது மான நஷ்ட வழக்கு தொடரவோ முன்வரவில்லை.

வழக்கு விசாரித்த நீதிமன்றம், வழக்கையே தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துவிட்டது.

1942ஆம் ஆண்டில் கோல்வாக்கரும், வாஜ்பாயும் தேசத்துக்கு செய்த ‘தியாகங்கள் இப்படித்தான் இருந்தது.

(நன்றி: பெரியார் முழக்கம், செப்டம்பர் 2021)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share