அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக உயர்க் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்,
“மாணவர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த இவர்களின் ஊதியம் 2022-ல் ரூ.15,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே 2024-ல் ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
தற்போது மீண்டும் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000ஆக உயர்த்திட முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 01.03.2026 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம்.
அரசு பாலிடெக்னிக் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு ரூ.20,000-ல் இருந்து ரூ.25,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு, ஆண்டிற்கு ரூ.53 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேர் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் என மொத்தம் 9,646 பேர் பயன்பெறவுள்ளனர்” என்று தெரிவித்தார்.
