ஆரம்பாக்கம் போக்சோ வழக்கு தொடர்பாக குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக காவல்துறை இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது. Rs. 5 lakh reward for information regarding arambakkam POCSO case
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய 4ஆம் வகுப்பு சிறுமி, மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் இதுவரை குற்றவாளி கைது செய்யப்படாதது காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குற்றவாளியின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”12.07.2025 அன்று, திருவள்ளூர் மாவட்டம், அரம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக அரம்பாக்கம் காவல் நிலைய குற்ற எண். 113/2025 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் ஒரு சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், சந்தேக நபரின் அடையாளம் இன்னும் நிறுவப்படவில்லை. இது தொடர்பாக காவல்துறையினரால் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபரை அடையாளம் காணவும், வழக்கை வெற்றிகரமாகக் கண்டறியவும் வழிவகுக்கும் குறிப்பிட்ட மற்றும் நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.5,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
தகவல் அளிப்பவரின் அடையாளம் அவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதி செய்வதற்காக கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

சந்தேக நபருடன் தொடர்புடைய தகவல் அல்லது தகவல் உள்ள எவரும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையை 99520 60948 என்ற பிரத்யேக மொபைல் எண்ணில் அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கபட்டுள்ளது.