தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு, காலை உணவு: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்!

Published On:

| By Kavi

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணமின்றி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 14) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, “

ADVERTISEMENT

1.தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் தனி திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

2.தூய்மை பணியாளர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்களுக்கு தூய்மை பணியாளர்களின் நல வாரியம் மூலமாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களின் எதிர்லாக நலனையும் வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில் இந்த நிதியுதவியுடன் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால் பணியின் போது இறக்க நேரிடும் தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்திட வழிவகை செய்யப்படும்.

ADVERTISEMENT

3.தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திட சுய தொழில் தொடங்கும் போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35 விழுக்காடு நிதி, அதிகபட்சமாக 3.5 லட்சம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். இந்த கடனை தவறாமல் திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்துக்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

4. தூய்மை பணியாளர் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு உயர்க் கல்வி கட்டண சலுகை மட்டுமின்றி, விடுதி,புத்தக தொகைக்கான கட்டணம் வழங்கும் வகையில் புதிய உயர்க்கல்வி உதவித் தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

5.நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வரும் 3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்களின் நல வாரியம் உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் திட்டங்கள், தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் என பல்வேறு முறைகளின் கீழ் 30000 குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

6.தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டம் முதல்கட்டமாக சென்னை மாநாகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிபடியாக மற்ற நகராட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படும்.

தூய்மை பணியாளர்களின் நலன் மீது முதல்வர் அக்கறை கொண்டுள்ளார். எனவே பொது மக்களின் நலனை கருதி தூய்மை பணியாளர்கள் வேலைநிறித்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும் தொழிலாளர்கள் தீர்ப்பாயத்திலும் உள்ளதால் முடிவு வந்த பிறகு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share