2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்ரவரி 17) 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து துறைகளுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ததை தொடர்ந்து, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விவசாயத் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மை, சார்புத் துறைகளுக்கென 1,94,076 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி அடைந்திட ‘கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்’, அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து 2021-22 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 707 கோடி ரூபாய் செலவினம் மேற்கொள்ளப்பட்டு 61 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க 53 இலட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 21 இலட்சம் பழச்செடிச் தொகுப்புகள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஊரகப் பகுதிகளில், ஊட்டச்சத்துத் தேவை குறிப்பிடத்தக்க அளவு நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
”முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்” 2024-25 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் 178 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்பட்டு இதுவரை 21 இலட்சத்து 35 ஆயிரம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 2025-26 ஆம் ஆண்டிலும், இத்திட்டம் 15 திட்டக்கூறுகளை ஒருங்கிணைத்து 142 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பசுந்தாள் உர விதைகள் விநியோகம், மண்வள மேலாண்மை, இயற்கை இடுபொருள் தயாரிப்பு மையங்கள், உயிர் வேளாண்மை, வேளாண் காடுகள் உள்ளிட்ட திட்டங்கள் 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு பயிர்களையும் உயிரினங்களையும் தாங்கும் மண்ணின் வளம் காக்கப்பட்டு பயிர்வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது
வேளாண் காடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு வேளாண்காடுகள் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அளிக்கப்பட்டு, இக்கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. உயர்மதிப்புள்ள தேக்கு, சந்தன மரம், செம்மரம், மகோகனி போன்ற மரங்களை உழவர்கள் தயக்கமின்றி சாகுபடி செய்திட ஏதுவாக, மரங்களை வெட்டுதல், வெட்டிய மரங்களை எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றுக்கான விதிகளைத் தளர்த்திடவும், மரங்களை நட்டுப் பராமரிக்கத் தேவையான உதவிகள் வழங்கிடவும், திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தவும் இக்கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் அவர், “முதலமைச்சரின் 1,000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. உழவர் நல சேவை மையங்களை அமைக்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு 30 சதவீத மானியமாக 3 இலட்சம் ரூபாய் முதல் 6 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
2025-26 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தில்” 15 இலட்சம் காய்கறி விதைத் தொகுப்புகள், 9 இலட்சம் பழச்செடித் தொகுப்புகள் மற்றும் 1 இலட்சம் பயறுவகை விதைத் தளைகள் மொத்தம் 25 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ.19 கோடி நிதியில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கான தட்டுப்பாடு நேராமல் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 இலட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், மொத்தமுள்ள 23.86 இலட்சம் விவசாய மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதற்கென இத்துறையால் இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது.
2025-26 குறுவை கொள்முதல் பருவத்தில் சன்ன இரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.156/-ம், சாதாரண இரகங்களுக்கு ரூ.131/-ம் ஊக்கத்தொகையாக வழங்கி அவற்றின் கொள்முதல் விலை முறையே ரூ.2,545 மற்றும் ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இதுவரை 186 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,118 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 184 இலட்சம் ஏக்கர் பரப்பு, சுமார் 80 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் காப்பீட்டுக் கட்டண மானியமாக , 6,073 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
வெள்ள காலங்களில் ஒரு நெல் மணி கூட வீணாக கூடாது என்ற அடிப்படையில் 495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு தடங்கலங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெண்கள் மற்ற கைம்பெண்கள் வருமானத்தை ஈட்டுவதற்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் செம்மறியாடுகள் 38,800 பயனாளிகளுக்கு ரூபாய் 75 கோடியே 63 லட்சம் செலவில் வழங்கப்பட்டுள்ளன.
ஆதி திராவிட விவசாயிகளுக்கு ரூ.62 கோடியில் திட்டங்கள் மூலம் 17,035 பேர் பயன்பெற்றுள்ளனர். மேலும் 24 லட்சம் ஏக்கரில் ரூ.174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம் செயல்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் வழங்கப்பட்ட கடன் குறித்து பேசிய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “கிராமங்களின் முக்கிய நிதி ஆதாரங்களாக விளங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தமிழ்நாட்டில் பயிர் சாகுபடிக்கான குறுகியகால வேளாண் கடன் தேவைகளை நிறைவு செய்கின்றன. இவற்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 83 இலட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு 69,457 கோடி ரூபாய் பயிர்க்கடனும், 16 இலட்சத்து 9 ஆயிரம் நபர்களுக்கு 8,938 கோடி ரூபாய் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடனும் வழங்கப்பட்டுள்ளன. பயிர்க்கடன், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்கான கடன் ஆகியவற்றுக்கான வட்டி மானியமாகவும் உரிய நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி ஊக்கத்தொகையாகவும் 3,002 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
2026-27 ஆம் ஆண்டுக்கான வேளான் பட்ஜெட்டை வெளியிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், “2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், வேளாண்மை – உழவர்நலத் துறைக்கு 47,248.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, உழவர் நலனுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளன” என்று அறிவித்தார்.
