ரூ.30 லட்சம் சில்லறை காசுகள், ரூ.14 கோடி நகைகள்.. ’விஜய்’ பாத்திரங்கள்.. பறக்கும் படையிடம் சிக்கின!

Published On:

| By Mathi

Flying Squad EC

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை நடத்திய அதிரடி சோதனைகளில் ஒரு கண்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.30 லட்சம் சில்லறை காசுகள், ரூ.14 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15-ந் தேதி மாலையில் இருந்தே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

ADVERTISEMENT

இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில், கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் ரூ23.28 கோடி ரொக்கப் பணம், பரிசு பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  • விருதுநகர் சூலக்கரை பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்ட போது மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற வேனில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் நகைகள் குவியல் குவியலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.14 கோடி. நாகர்கோவிலில் நகை கடைகளுக்காக இவை கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் வேனுடன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த விஜய் படம் பொறித்த சில்வர் பாத்திரங்கள் மூட்டை மூட்டையாக சிக்கின. அதில் விஜய் படத்துடன் தவெக பொதுச்செயலாளர் அருண்ராஜ் படமும் அச்சிடப்பட்டிருந்தது.
  • பெங்களூரில் இருந்து ஓசூர் வந்த ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வேனும் சோதனையிடப்பட்டது. அதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ 2.34 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
  • தேனி லோயர்கேம்ப் வழியாக வந்த ஒரு வேன் சோதனையிடப்பட்டது. அதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சில்லறை காசுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வேனில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய சில்லறை காசுகளை ஒப்பந்தம் அடிப்படையில் வாங்கி சென்னைக்கு கொண்டு செல்லப்படுவதாக” தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் சரியாக இருந்ததால் அவை திருப்பி ஒப்படைக்கப்பட்டன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share