கேரளாவில் கண்டெய்னர் லாரியில் ரூ3.24 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தமிழக பாஜகவின் நிர்வாகிகளான துரையரசு, ஶ்ரீராம் உள்ளிட்டோர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். Kerala Tamil Nadu BJP
கேரளாவின் ஆலப்புழா அருகே கொல்லம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஜூன் 30-ந் தேதி, கண்டெய்னர் லாரியில் ரூ3.24 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஆலப்புழாவின் கரீலகுலஞர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேர் கும்பல் ஈடுபட்டிருப்பதை கண்டுபிடித்தது கேரளா போலீஸ். மேலும் கொள்ளை கும்பல் பயன்படுத்திய வாகனங்களின் சிசிடிவி பதிவுகளும் சிக்கின.
இதனடிப்படையில் கேரளா போலீஸ், தமிழகத்தில் தென்காசி மாவட்டம் குற்றாலம் தொடங்கி காவிரி டெல்டாவின் திருவாரூர் மாவட்டம் வரை விசாரணை நடத்தியது.
ரூ 3.24 கோடி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வாகனங்களில் ஒன்று திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகி ஶ்ரீராமுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து ஶ்ரீராமை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற தீவிர விசாரணைகளில் திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகளான துரையரசு, சதீஷ், ராஜேஷ், ஹரிகுமார் என பலருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பாஜக நிர்வாகிகள் உட்பட மொத்தம் 11 பேரை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் தமிழக பாஜக நிர்வாகிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.