தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் நகராட்சி நிர்வாகத் துறைக்கு நிதி ஒதுக்கீடு தொடரபாக பேசிய அவர், “கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின்’ கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10,226 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், சாலை மேம்பாடு, சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பூங்காக்கள், சந்தைகள், எரிவாயு தகன மேடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிங்காரச் சென்னை 2.0′ திட்டத்தின் கீழ், இதுவரை 1,227 பணிகள் 2,491 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு, அவற்றில் 1,123 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்தோடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் 87 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், 15,591 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டு, ஒரு கோடியே 65 இலட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின், அனைத்து நீர்ப் பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் அமைந்துள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்கள் மூலம் சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திடும் வகையில், ‘முதன்மை சுற்றுக்குழாய்த் திட்டம்’ 3,109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 150 எம்.எல்.டி. திறன் கொண்ட நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், தொடங்கப்பட்டு, சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கப்பெறும் நிலையில், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள நாற்பது ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக்குடிநீர்த் திட்டங்களை புதுப்பித்து அவற்றை மேம்படுத்திடவும், தேவையான இடங்களில் செயல்திறனை உரிய நீர் ஆதாரங்களை புதுப்பித்திடவும், 116 கூட்டுக்குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக 809 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளில், கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விற்பனைப் பகுதிகள், தெரு விளக்குகள், அழகிய பூங்காக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 374 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மேலும், மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 28,227 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார்.
