தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். Tourism Tamil Nadu
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் ஜி.செல்வம், சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவாலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சுதேசி தரிசனம், சுதேசி தரிசனம் 2.0, பிரசாதம், மூலதன முதலீட்டுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி உள்ளிட்ட திட்டங்கள் மூலம் ஆன்மீகத் தலங்கள், பாரம்பரிய இடங்கள் போன்றவற்றில் சுற்றுலா உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அமைச்சர் கூறினார்.
இதன்படி, நிதியாண்டு 2024-25-ல்
- மாமல்லபுரத்தில் பாரம்பரிய பூங்காவான நந்தவன மேம்பாட்டுக்கு ரூ.99.67 கோடி
- தேவாலாவில் மலர் தோட்டத்திற்கு ரூ.70.23 கோடி
- ராமேஸ்வரம் மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.20.01 கோடி
- 8 நவகிரக கோவில்கள் மேம்பாட்டுக்கு ரூ.40.94 கோடி
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் அலங்கார மின் விளக்கு அமைத்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.11.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
2023-24-ம் நிதியாண்டில் மல்லபுரத்தில் கடற்கரைக் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.30.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சென்னை – மாமல்லபுரம் – ராமேஸ்வரம் – மண்பாடு – கன்னியாகுமரி கடற்கரை சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.73.13 கோடியும், காஞ்சிபுரம் மேம்பாட்டுக்கு ரூ.13.99 கோடியும், வேளாங்கண்ணி மேம்பாட்டுக்கு ரூ.4.86 கோடியும் 2016-17-ம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதாக ஷெகாவத் தெரிவித்தார்.