தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் நெடுஞ்சாலைகள் துறைக்கு 21,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘கடந்த ஐந்து ஆண்டுகளில், 1,085 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 8,313 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்தும் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 6,191 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 692 கி.மீ. நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பணிகள் விரைவில் நிறைவு பெறும். நடப்பாண்டில், 253 கி.மீ. நீளமுள்ள சாலைகளை 1,647 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழித்தட சாலைகளாக அகலப்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 7,517 கி.மீ. நீளமுள்ள ஊராட்சி /ஊராட்சி ஒன்றிய சாலைகள், 7,625 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதர மாவட்டச் சாலைகளாக தரம் உயர்த்த ஆணையிடப்பட்டு, அவற்றில் 6,213 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 6,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 1,057 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,268 தரைப்பாலங்களை உயர்மட்டப் பாலங்களாக அமைப்பதற்கான பணிகள் 2,635 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இது வரை, 1,168 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக 2,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,342 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 42 உயர்மட்டப் பாலங்களும், 2,184 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 46 இரயில்வே மேம்பாலங்களும், 2,388 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 புறவழிச்சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் கோயம்புத்தூர் மாநகரில், 1,791 கோடி ரூபாய் மதிப்பிலான 10.1 கி.மீ. நீளமுடைய ஜி.டி.நாயுடு உயர்மட்டச் சாலை மற்றும் 393 கோடி ரூபாய் மதிப்பிலான 2.4 கி.மீ. நீளமுடைய சி.சுப்பிரமணியம் மேம்பாலம் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. மேலும், மதுரை மாநகரில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான 1.2 கி.மீ. நீளமுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் நான்குவழி மேம்பாலம் மற்றும் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய கைலாஷ் சந்திப்பில் சாலை மேம்பாலம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
சென்னையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான உயர்மட்டச் சாலை, 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மடிப்பாக்கத்தில் வாகன சுரங்கப் பாதை மற்றும் மதுரை – கோரிப்பாளையத்தில் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,132 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
