போக்குவரத்து ஊழியர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் போனஸ் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்தநிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (அக்டோபர் 15) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
எட்டு அரசு போக்குவரத்து கழகங்களின் 20,912 பேருந்துகள். 10,125 க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை வழங்குவதன் மூலம் தினசரி 1.97 கோடி மக்கள் பயணிக்கின்றனர்.
இதில் 60% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பங்களிப்பு இன்றியமையததாகும்.
இதனால் தமிழ்நாட்டின் பேருந்து வலையமைப்பு ஒரு முக்கியமான சமூக பாதுகாப்பு வலையமைப்பாக விளங்குகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 1.05,955 பணியாளர்களுக்கு, 2024-2025 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படும் மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 175 கோடியே 51 இலட்சம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் இன்று (15.10.2025) வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.