தமிழ் மொழி பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்தால் 10,000 ரூபாய் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 20) பள்ளிக் கல்வித் துறையின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “277 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, 94 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறக்கும் விழா, 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை தொடங்கி வைக்கும் விழா என முப்பெரும் விழா என்று சொல்லிதான் அழைப்பை வழங்கினோம். ஆனால் முப்பெரும் விழா ஐம்பெரும் விழாவாக நடந்துகொண்டிருக்கிறது.
எங்களுடைய சாரண சாரணியர் இயக்கத்திற்கான தலைமை அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிற விழா… தமிழ் பாடத்தில் 100/100க்கு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கும் விழா என்று இதை ஐம்பெரும் விழாவாக நடத்துகிறோம்.
கடந்த ஆண்டு 48 மாணவர்கள், இந்த ஆண்டு 140 மாணவர்கள் 100/100 தமிழ் பாடத்தில் எடுத்துள்ளனர். இந்த ஊக்கத்தொகை மாணவர்களை தமிழ் மொழியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த 52 மாதத்தில் 9400 வகுப்பறைகளை கட்டி கொடுத்திருக்கிறோம். இது வெறும் கட்டிடங்கள் இல்லை. பல லட்சம் முதல் பட்டதாரிகளுக்காக நாங்கள் ஏற்றி வைக்கும் அறிவு தீபங்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ஆசிரியர்களே, 6 மாதத்தில் உங்களுக்கு மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுத்தேர்வு வரும், எங்களுக்கு பொதுத்தேர்தல் வரும். நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றி பெற வேண்டும். இது அரசியல் பேச்சு அல்ல, அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்காகவே பேசுகிறேன்” என்றும் கூறினார்.