சென்னை மாதவரம் அருகே போலீசாரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி ‘தொப்பை’ கணேசன் என்பவரை இன்று காலை (மார்ச் 16) போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் பிரபல ரவுடி ‘தொப்பை’ கணேசன். இந்நிலையில் கடந்த ஜனவரி 30ம் தேதி சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே வீடு புகுந்து உரிமையாளரை கடடிபபோட்டு ரூ.25 லட்சம் பணம், 15 சவரன் நகையை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொப்பை கணேசனை பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே அவர் மறைந்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் சரணடைய மறுத்த கணேசன், தான் வைத்திருந்த கத்தியால் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது.
நிலைமை கையை மீறிச் சென்றதால், தற்காப்புக்காகப் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரவுடி நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் இருவர் தற்போது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்கவுண்டர் நடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்த ரவுடி கணேசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
