ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய ரவுடி நாகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 9) உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ரவுடிகள், வழக்கறிஞர்கள் என சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணை நீதிமன்றத்தில் 5000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை செம்பியம் போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் முதல் குற்றவாளியாக ஆயுள் தண்டனை கைதியான வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலில் பிலுருபின் படிவம் மூளை வரை ஏறி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் கடந்த சில நாட்களாக இருந்து வந்தார். அவருக்கு கை கால்கள் கட்டப்பட்டு தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்துள்ளார்.
அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கும் நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ரவுடி நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.