ரவுடி நாகேந்திரன் மரணமடையவில்லை… பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக காவல்துறை தப்பவைத்துவிட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏ1 ஆக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதியான ரவுடி நாகேந்திரன் உடல் நலக் குறைவு காரணமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதி மரணமடைந்தார்.
அவரது உடல் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்படட்து.
இந்தசூழலில் அவர் மரணமடையவில்லை, பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தப்ப வைத்துவிட்டனர் என்று போலீஸ் மீது ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு நேற்று (நவம்பர் 7) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் வழக்கு கோப்புகளை மாநில காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் மனுதாரார்கள் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தரப்பில் ஆஜரான பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான வழக்கறிஞர் ஆனந்தன், இந்த வழக்கை தமிழக காவல்துறை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என வாதிட்டார்.
மேலும், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்றும் தெரிவித்தார்
சமீபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படும் நாகேந்திரன் இறக்கவில்லை என்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரை தமிழக அரசு தப்ப வைத்து விட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, அஸ்வத்தாமன், அரிகரன் மற்றும் அஞ்சலை ஆகிய மூவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவை நவம்பர் 10 ம் தேதிக்கு நீதிபதி கார்த்திகேயன் ஒத்தி வைத்தார்.
மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையையும் நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
