பிசிசிஐ நெருக்கடிகள் காரணமாக இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியை செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டனர்.
இருவருமே தற்போது 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பையை மனதில் வைத்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிசிசிஐயின் புதிய விதிமுறைகள் இருவருக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள புதிய விதிமுறையின்படி, இந்திய அணியில் வீரர்கள் இடம்பிடிக்க வேண்டுமென்றால், யோயோ பிட்னஸ் சோதனையைத் தாண்டி உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
ஏற்கெனவே நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க ரஞ்சி டிராபியில் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
அதேபோன்று, ஒருநாள் அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், வீரர்கள் இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு ஒருநாள் தொடரில் கட்டாயம் விளையாட வேண்டுமாம்.

ஐபிஎல் தொடரின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணிக்கு அதிகளவில் இளம் வீரர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதன்படி வரும் 2027 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்த இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது பிசிசிஐ. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீரும் அதே முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக தான் 2027 உலகக் கோப்பையின் போது 40 வயதை நெருங்க இருக்கும் ரோகித் மற்றும் விராட் கோலிக்கு நெருக்கடி அளித்து அவர்களாகவே ஓய்வு முடிவை அறிவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை பிசிசிஐ ஏற்படுத்தி வருகிறது.
இந்திய அணி வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், டிசம்பரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் ரோகித் – கோலி இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லையென்றால், அதுவே அவர்களின் ஒருநாள் கிரிக்கெட் பயணத்தின் முடிவாக இருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.