CEAT விருது விழாவில் மேடையில் ஒலித்த தோனியின் குரலைக் கேட்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா விழுந்து விழுந்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் விளையாடினார். அந்த ஆட்டத்தில் ‘ஆட்ட நாயகன்’ விருதைப் பெற்றதுடன், இந்தியாவிற்கும் சாம்பியன் கோப்பையை பெற்று தந்தார்.
அதன்பின்னர் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அவரது கேப்டன் பதவியை பறித்து, சுப்மன் கில்லுக்கு வழங்கியுள்ளது. இதன்மூலம் மீண்டும் சாதாரண வீரராக ரோகித் சர்மா களமிறங்க உள்ளார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு CEAT விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கபில்தேவ், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், அர்ஸ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர்.
அப்போது மேடையில் ஷாரங் ஷிரிங்கர்பூர் யார் என்ற மிமிக்ரி கலைஞர், எம்.எஸ்.தோனி, டேனி மோரிசன் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் குரலில் பேசி அசத்தினார்.
அப்படியே தோனி பேசுவதை போலவே ஷாரங் பேச, அதைக் கேட்ட ரோகித் சர்மா விழுந்து விழுந்து சிரித்தார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த ஷாரங் ஷிரிங்கர்பூர்?
தோனியின் குரலில் பேசி இணையத்தில் கவனம் ஈர்த்தவர் ஷாரங் ஷிரிங்கர்பூர். இளம் இந்திய மிமிக்ரி கலைஞரான இவர் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களை குரலில் துல்லியமாக பேசி அசத்தி வருகிறார். சமீபத்தில் ‘கிரேட் இந்தியன் கபில் ஷோ’வில் பங்கேற்றார்.
இந்த நிலையில் சியர் விருது விழாவில் அப்படியே தோனி போன்று பேசி கவனம் ஈர்த்துள்ளார் ஷாரங்.