தமிழகத்துக்கு ரூ.48,172 கோடி மதிப்பில் சாலை பணிகள் : நிதின் கட்கரி

Published On:

| By Kavi

Road works worth Rs 48172 crore

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, “தமிழ்நாட்டில் பாரத் மாலா திட்டத்தின் கீழ் 45 சாலைத் திட்டங்கள் 48,172 கோடி ரூபாய் மதிப்பில் 1476 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்போது  1230 கிலோமீட்டருக்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 53 சாலை திட்டப் பணிகளில் 16 பணிகள் முடிந்துள்ளன.

அதில், தர்மபுரி தொகுதிக்கு உட்பட்ட தொப்பூர் முதல் லட்சுமி நகர் வரை ரூ. 242 கோடி செலவில் 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிச் சாலை அமைக்கும் பணியும் அடங்கும்.

ADVERTISEMENT

விருதுநகர் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி முதல் அணியாக்கரப்பட்டி வரை ரூ. 294 கோடி செலவில் 42 கிலோமீட்டர் தூர நான்குவழிச் சாலை விரிவாக்க பணிகள், 

பல்லடம் முதல் குறுக்கத்தி கிராமம் வரை ரூ. 274 கோடி செலவில் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு  இருவழிச் சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள்,  

ADVERTISEMENT

தர்மபுரி தொகுதிக்குட்பட்ட மஞ்சவாடி கணவாய் முதல் ஏ. பள்ளிப்பட்டி வரை ரூ. 162 கோடி செலவில் 18  கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் முதல் திருப்பாச்சூர் வரையிலான நான்கு வழி சாலையில் 17 கிலோ மீட்டர்  தூரத்திற்கு எஞ்சியுள்ள பணிகள் ரூ. 467 கோடி செலவில் இந்த ஆண்டு முடிக்கப்படும்.

தென்காசி தொகுதியில் குன்னக்குடி முதல் குத்துக்கல் வலசை வரை ரூ.53 கோடி செலவில் அணுகு சாலை பணிகளும், ஈரோடு  கோயம்புத்தூர், வேலூர் , மதுரை ஆகிய தொகுதிகளில் 33 கிலோ மீட்டர்  தூரத்திற்கு  சாலைகளை  பலப்படுத்தும் பணிகளும் இந்த ஆண்டு நிறைவடையும்.

வேலூர் மக்களவை தொகுதியில் உள்ள லத்தேரி முதல் நெல்வாய் வரை ரூ. 752.94 கோடி செலவில் 20.42 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை  அமைக்க ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதி முதல் கன்னியாகுமரி வரை ரூ. 1564.23 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 53.71 கிலோமீட்டர் தொலைவிலான நான்கு வழிச்சாலையில் எஞ்சியுள்ள பணிகளும் கூடுதல் கட்டுமான பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடையும்

நிலம் கையகப்படுத்துவது, சாலைக் கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி தொடர்பான பிரச்சனைகள், கட்டுமான பொருட்கள், சந்தையில் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் போன்றவை சில திட்டங்கள் தாமதமாவதற்கும் அதன் மதிப்பீடு அதிகரிப்பதற்கும் காரணங்களாக அமைந்திருக்கின்றன. பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share