வரதட்சனை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட தன் மகளின் நினைவாக குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ரிதன்யாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 10) ’இலவச சட்ட உதவி மையம்’ தொடங்க உள்ளதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா (வயது 27). எம்.எஸ்.சி பட்டப்படிப்பு படித்த இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. ஆனால் திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கணவர் மற்றும் மாமனார் மாமியாரின் வரதட்சணை கொடுமை தாங்காமல் கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுமார் ஒன்றரை மாத காலம் சிறையில் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணயை சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு குழவுக்கு மாற்றக்கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை விசாரணை நடந்து வரும் நிலையில் சிபிஐ அல்லது வேறு அமைப்புக்கு விசாரணையை மாற்றுவதில் எந்த பலனும் இல்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட எஸ்.பி. வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
இந்த நிலையில் ரிதன்யாவின் 28வது பிறந்தநாளான இன்று இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க உள்ளதாக அவரது பெற்றோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரிதன்யாவின் தந்தை அண்ணாமலை கூறுகையில், “வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்ட எங்களது மகள் ரிதன்யாவின் நினைவாக அவளது பெயரில் ‘ரிதன்யா சோசியல் சர்வீஸ்’ (Rithanya Social Service) என்ற அறக்கட்டளை தொடங்கியுள்ளோம். அதன்மூலம் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பெண்களுக்கான அனைத்து பிரச்னைகளுக்கும் இலவச சட்ட ஆலோசனை மற்றும் உதவி வழங்க உள்ளோம்.
அவர்களுடன் கடைசி வரை கூட இருந்து சட்ட உதவிகளை செய்வோம். இது முதற்கட்டம்தான். வருங்காலத்தில் ஏழை எளியோர் அனைவருக்கும் உதவுவோம் இங்குள்ள எல்லா மகள்களும் எங்கள் மகள் ரிதன்யாதான். அதேநேரம் எங்கள் மகளுக்கு நடந்தது யாருக்கும் நடக்கக்கூடாது என்பதால் இந்த சேவையை செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.