“என் மகள் ஒருவனுக்கு ஒருத்திதான் என்று நினைத்து இறந்து விட்டாள். அதனால் மகளை இழந்தாலும் கூட எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது” என்று தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் தந்தை சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். Rithanya father controversial speech
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யாவுக்கும், ஜெயம் கார்டன் பகுதியில் வசித்து வரும் கவின்குமார் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து 78 நாட்கள் ஆன நிலையில் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரிதன்யாவின் மரணத்தை தொடர்ந்து, பெண் பிள்ளைகளை சகித்துக் கொண்டு வாழுமாறு பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்காதீர்கள் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை புதிய தலைமுறைக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், “முதலில் என் மகள் கணவர் வீட்டில் நடந்தவற்றைப் பற்றி என்னிடம் சொல்லும் போது, ”15 நாட்களிலேயே என்ன தங்கம் தெரிந்து கொள்ள முடியும். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போ.
பெரிய அளவில் ஏதாவது பிரச்சனை செய்தால் என்னிடம் சொல், நான் வந்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்று சொன்னேன்.
இதனால் தான் முடிந்தவரை சமாளிப்போம் என்று இறுதி கட்டம் வரை என் மகள் எதுவும் என்னிடம் சொல்லவில்லை.
கல்யாணம் நடந்து 20 நாட்களிலேயே சம்மந்தியே இரவு ஒரு மணி அளவில் என்னை தொடர்பு கொண்டு, ’ரிதன்யா உங்கள் வீட்டுக்கு வருகிறேன்’ என்று சொல்கிறாள்.
அதனால் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு மகளை அழைத்து வந்து விட்டேன்.
இதையடுத்து சம்மந்தியே எங்களிடம் வந்து மன்னிப்பு கேட்டார். அவரிடம் ”மன்னிப்பு எல்லாம் வேண்டாம், என் பிள்ளை ஏதாவது தவறு செய்ததா? புத்திமதி சொல்லி அனுப்புகிறேன்” என்று கேட்டேன்.
அதற்கு அவர், ’உங்கள் மகள் எந்த தவறும் செய்யவில்லை’ என்று சொன்னார். அப்போது மூன்று பேரும் வந்து மன்னிப்பு கேட்டனர்.
அதனால் ’இரண்டு நாட்களில் மகளை அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பினேன். அதன்படியே இரண்டு நாட்களில் அனுப்பி வைத்தேன்.
அதன்பின்னர், “உங்கள் வீட்டில் இருந்து கம்மியான நகை தான் கொண்டு வந்திருக்கிறாய். எல்லாம் ஒரிஜினல் தங்கம் தானா? நாங்கள் கேட்டோம் என்று கேட்காமல், நீயாக கேட்டு நகைகளை எல்லாம் வாங்கி வா.
எங்கள் வழக்கத்தில் கல்யாணத்துக்கு முதல் நாள் இவ்வளவு நகை போடுகிறோம் என்று அழைத்து காண்பித்து விடுவார்கள். நீங்கள் அதெல்லாம் செய்யவில்லை.
எனவே இதை எல்லாம் நீயே கேட்பது போல் கேட்டு வாங்கி வா” என்று கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள்.
மாமனார் மாமியார் ஒரு பக்கம் இப்படி கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்றால், அந்தப் பையன் இரவெல்லாம் உடல்ரீதியாக அவ்வளவு டார்ச்சர் கொடுத்திருக்கிறான்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர், “என் மகள் செய்த தவறை இனி உலகத்தில் எந்தப் பெண்ணும் செய்யக் கூடாது. வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கிறது. 25 வயது வரை காப்பாற்றிய அப்பா அம்மா, சாகுற வரைக்கும் காப்பாற்றமாட்டோமா?
மாற்று வாழ்க்கை அமைத்துக் கொள்வதெல்லாம் அவரவர் விருப்பம். என் மகள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்று சொல்லி நினைத்து இறந்துவிட்டார். அதனால் என் பெண்ணை இழந்தால் கூட எனக்கு பெருமையாக தான் இருக்கிறது.
எல்லா பெண்களும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. வாழ்வதற்கு வழி இருக்கிறது. ஆனால் இந்த தவறான முடிவை மட்டும் எடுக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்தநிலையில் ரிதான்யாவின் தந்தைக்கு பலரும் ஆறுதல் கூறும் அதே வேளையில், அவரின் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.