ரிதன்யா மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மாமனார் மாமியார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா திருமணமாகி இரண்டே மாதத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தனது மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கணவர் கவின் உடல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும் தற்கொலைக்கு முன் தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
இதனால் அவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில், தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று ரிதன்யா கூறி இருந்ததாகவும், இரு விட்டாரும் பொருளாதாரத்தில் சம நிலையில் இருப்பதால் தங்களுக்கு வரதட்சணை தேவை இல்லை என்றும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் என்றும் வாதிடப்பட்டது.
ரிதன்யா தந்தை சார்பில், ‘தனது மகள் தற்கொலை வழக்கில் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாமீன் கொடுத்தால் அவர்கள் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். அவர்கள் தான் ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். கவின் மனோதத்துவ ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரிதன்யாவின் பிரேத பரிசோதனையை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அந்த அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என்று தெரிவித்த நீதிபதி உடல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது, அந்த ஆடியோ அவரது செல்போனில் தான் பதிவு செய்யப்பட்டதா என்றும் கேள்விகள் எழுப்பினார்.
இதற்கு காவல்துறை தரப்பில், ரிதன்யா போனில் தான் அந்த ஆடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ரிதன்யா கவின் இருவரின் செல்போன்களும் தடையவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை பத்து நாட்களுக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ரிதன்யாவுடன் படித்தவர்கள் அவரது உறவினர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டி உள்ளது என்று கூறப்பட்டது.
இதையடுத்து தடயவியல் அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்திரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.