1974-ம் ஆண்டு, இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் ஒரு கலைக்கூடம். நடுவில் மரினா அப்ரமோவிக் (Marina Abramović) என்ற கலைஞர் சிலையைப் போல அசையாமல் நிற்கிறார். அவருக்கு முன் ஒரு மேஜை. அதில் ரோஜா பூ, இறகு, தேன், கத்தி, சங்கிலி, பிளேடு, துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா என மொத்தம் 72 பொருட்கள். அருகில் ஒரு அறிவிப்பு பலகை: “மேஜையில் உள்ள பொருட்களை வைத்து என் உடலில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அடுத்த 6 மணி நேரத்திற்கு நான் ஒரு ஜடப்பொருள். என் உயிருக்கே ஆபத்து வந்தாலும் நானே பொறுப்பு.”
இதுதான் உலகையே அதிர வைத்த ‘ரிதம் 0′ (Rhythm 0) சோஷியல் எக்ஸ்பெரிமெண்ட்.
என்ன நடந்தது? ஆரம்பத்தில் மக்கள் தயங்கினர். சிலர் ரோஜா பூவைக் கொடுத்தனர், சிலர் தலையை வருடினர். ஆனால், நேரம் செல்லச் செல்ல, அந்தப் பெண்ணிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்று தெரிந்ததும், மக்களின் மனதிலிருந்த மிருகம் விழித்துக்கொண்டது. ஒருவர் அவர் முடியை வெட்டினார். ஒருவர் அவர் ஆடைகளை கிழித்து நிர்வாணமாக்கினார். ஒருவர் கூர்மையான முட்களால் அவர் வயிற்றில் கீறினார். உச்சகட்டமாக, ஒருவர் துப்பாக்கியில் தோட்டா லோட் செய்து அவர் கழுத்தில் வைத்தார். சரியாக 6 மணி நேரம் முடிந்ததும், மரினா அப்ரமோவிக் உயிர் பெற்றவரைப் போல அசையத் தொடங்கினார். அவ்வளவு நேரம் அவரை சித்திரவதை செய்தவர்கள், அவர் கண்களைப் பார்க்கத் தைரியம் இல்லாமல் பயந்து ஓடினார்கள்.
இன்றைய ‘டிஜிட்டல்‘ ரிதம் 0: இந்தச் சம்பவத்தை ஏன் இப்போது பேச வேண்டும்? அன்று அந்த நான்கு சுவற்றுக்குள் நடந்தது, இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் தினமும் நடக்கிறது. இணையம் (Internet) என்ற திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு நாம் செய்யும் செயல்கள், அன்று அந்த மக்கள் செய்ததற்குச் சற்றும் குறைவானதல்ல.
- முகமூடி அணிந்த மிருகங்கள்: அன்று மரினா எதற்கும் ரியாக்ட் செய்ய மாட்டார் என்ற தைரியம் எப்படி மக்களை வன்முறையாளராக மாற்றியதோ, அதேபோல இன்று ‘கமெண்ட் பாக்ஸ்‘ (Comment Box) என்ற பாதுகாப்பான இடத்தில் இருந்துகொண்டு, யாரை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்தலாம் என்ற தைரியம் பலரை ‘ஆன்லைன் மிருகங்களாக’ மாற்றியுள்ளது.
- ட்ரோல் கலாச்சாரம்: ஒரு பிரபலத்தையோ அல்லது சாதாரண நபரையோ சமூக வலைதளங்களில் வைத்துச் செய்யும் ‘சைபர் புல்லிங்’ (Cyberbullying), அன்று மரினாவின் ஆடைகளைக் கிழித்ததற்குச் சமம். அந்த நபர் மனதளவில் எவ்வளவு ரணப்படுகிறார் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், “ஜஸ்ட் ஃபன்” என்று கடந்து செல்கிறோம்.
- பொறுப்பின்மை: “யார் என்று தெரியாத ஐடியில் (Fake ID) இருந்து திட்டினால் என்ன ஆகப்போகிறது?” என்ற மனநிலை தான் ஆபத்தானது. எதிரில் இருப்பவரை ஒரு மனிதராகப் பார்க்காமல், வெறும் ‘கன்டென்ட்’ (Content) ஆகப் பார்க்கும் மனநிலை பெருகிவிட்டது.
முடிவு: தண்டனை இல்லை என்ற சூழல் வரும்போதுதான், ஒரு மனிதனின் உண்மையான குணம் வெளிப்படும் என்று ‘ரிதம் 0’ நிரூபித்தது. இன்று இணையத்தில் நமக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறது. நாம் கையில் எடுப்பது ரோஜாவையா அல்லது கத்தியையா என்பது நம் வளர்ப்பில்தான் இருக்கிறது.
அடுத்த முறை ஒருவருக்குக் காயப்படுத்தும் வகையில் கமெண்ட் செய்யும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள்… நாம் அந்த 1974-ம் ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிடக் கூடாது!
