இயக்குனர் சேரன் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்க, சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா. ராஜேஷ் , இளவரசு நடிப்பில் 2004 பிப்ரவரி 20 வெளிவந்து மறக்க முடியாத படமாக நிலைத்த படம் ஆட்டோகிராப்.
1995 முதல் 2004 வரை பத்தாண்டுகளில் வந்த சிறந்த தமிழ்ப் படங்கள் இரண்டு . அவை அன்பே சிவமும் ஆட்டோகிராப்பும் என்று பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
அப்படிப்பட்ட ஆட்டோகிராப் இப்போது மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது . புதிய ஆட்டோகிராஃபுக்கும் பழைய ஆட்டோகிராஃபுக்கும் என்ன வித்தியாசம் ? இன்று இந்தப் படத்தைப் பார்க்கும்போது எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
வாழ்வில் அடிபட்டு போராடி முன்னேறி திருமணம் செய்து கொள்ளும் செந்தில் குமார் (சேரன்), தன் திருமணத்துக்கு பள்ளியில் படித்த நண்பர்கள், ஆசிரியர்கள் , காதல் என்று முழுசாகப் புரிவதற்குள் பிரிந்து போன முதல் காதலி (மல்லிகா), கேரளாவில் கல்லூரியில் படிக்கும்போது இளமையில் உருவாகி முத்தம் வரை போய் ,மலையாளிகளின் இனத் துவேஷத்தால் அடித்து நொறுக்கப்பட்டு துள்ளத் துடிக்கப் பிரிக்கப்பட்ட இரண்டாவது காதலி நாயகி(கோபிகா)….
ஆகியோரை தன் திருமணத்துக்கு அழைக்கப் போகிறான். அவர்கள் இப்போது எங்கே எப்படி இருக்கிறார்கள்? இந்த புதிய சந்திப்பு அவர்களுக்கும் ஏற்படுத்திய உணர்வெழுச்சிகள் எப்படி இருந்தன? அவர்கள் கல்யாணத்துக்கு வந்தார்களா என்பதே ஆட்டோகிராப்.
பலபேருக்கும் நெருக்கமான ஆனால் அதுவரை சொல்லபடாத கதை என்பது ஆட்டோகிராப் படத்தின் பெரும் சிறப்பு.

முதலில் இந்தப் படம் சேரனின் பொற்காலம் படத்தை தயாரித்த ரோஜா கம்பைன்ஸ் காஜா மொஹிதீன் தயாரிக்க, பிரபு தேவா நடிப்பில் உருவதாக இருந்தது . நடக்கவில்லை.
பின்னர் தானே தயாரிக்க முடிவு செய்த சேரன், நாயகனாக நடிக்க விக்ரமை அணுகினார் . கதை கேட்ட விக்ரம் ஜெமினி படம் கமர்ஷியலாக ஓடிக் கொண்டு இருக்கும் நிலையில் இப்போது காதல் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். இந்தக் கதையில் நடிக்க விஜய் மிகவும் ஆர்வம் காட்டினார். ஆனால் தேதிகள் விஷயம் ஒத்துப் போகவில்லை. அரவிந்த் சாமியை சேரன் கேட்க, அப்போதைக்கு இனி சினிமாவே வேண்டாம் என்ற மூடில் இருந்தார் அரவிந்த்சாமி .
தானே நாயகனாக நடித்தார் சேரன் .
பள்ளிக்காதல் பகுதியை 35 MM லென்சில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் , கேரளக் கல்லூரிக் காதல் பகுதியை விஜய் மில்டனும், சென்னையில் நடக்கும் சினேகா சம்மந்தப்பட்ட காட்சிகளை ஸ்டெடி கேம் கேமரா மூலம் ஒளிப்பதிவாளர் துவாரகநாத்தும் , எல்லா இடங்களில் நிகழ்காலத்தில் நடக்கும் ‘பாயிண்ட் ஆப் வியூ’ காட்சிகளை பாலுமகேந்திராவின் மகன் ஷங்கி மகேந்திராவும் ஒளிப்பதிவு செய்தார்கள்.
“இது ஓரளவுக்கு என்னுடைய வாழக்கை வரலாறு என்றே சொல்லலாம் “என்றார் சேரன் . சினேகா கேரக்டரையும் ஆரம்பத்தில் காதலி போலக் காட்டி ஒரு நிலையில் எல்லாம் காதல் என்று வேண்டாம் என்று தோழியாக மாற்றினார் சேரன். ( ஆனால் இந்த விசயத்தில் விக்ரமனின் புது வசந்தம் முன்னோடி)
இப்போது ரிலீஸ் ஆகி இருக்கும் ஆட்டோகிராப் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
படத்தில் டெக்னிக்கலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டைட்டில் மாற்றப்பட்டுள்ளது . மொத்தமாக தரக் கூட்டல் தெரிகிறது கேரளா சம்மந்தப்பட்ட சில காட்சிகளும் காதல் தோல்வியின் சேரன் அழும் சில காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. பின்னணி இசையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மனதில் நன்கு பதிந்த ஒரு படத்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்கும்போது, அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்பது நமக்குத் தெரியும். அப்படி வரும்போது முதல் முறை பார்க்கும்போது ஏற்படும் அதே உணர்வையோ இன்னும் அதிகப் புரிதலையோ தருவது என்பது, ஒரு மேஜிக் . அந்த மேஜிக் புதிய இப்போது ஆட்டோகிராப்பில் நடக்கிறது.
அறியாத அந்த பள்ளிக் காதல் பிரியும்போது அதே மூச்சு முட்டல் இப்போதும் நடக்கிறது. கல்யாணம் ஆகி மூன்று பிள்ளைகளுக்கு அம்மா ஆன பிறகு முன்னாள் காதலன் வந்திருப்பது தெரிந்த உடன் கமலா கண்ணாடி முன்னால் நின்று முகம் திருத்திக் கொள்ளும் யதார்த்தம்….
தனது முதல் காதலி பிரியும்போது சொல்லி அழுதது போலவே , பத்தாவதற்கு மேல் படிக்க முடியாமல் மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாகி அடுப்படியில் முடங்கிய சோகத்தை பார்க்கும்போது செந்தில்குமாருக்கு ஏற்படும் வேதனை… இன்னும் அப்படியே மெருகு குலையாமல் இருக்கிறது.
கல்லூரிக் காதல் எப்படி முடியும் என்பதற்கான குறியீட்டை ஆரம்பத்தில் கோபிகாவை கண்ணனுக்கு ஏங்கும் மீரா போலக் காட்டும் டைரக்சன் உத்தி சிறப்பு . அப்போது யாரும் விமர்சனத்தில் குறிப்பிடாத விஷயம் இது.
கல்லூரிக் காதலில் தோற்ற சமயத்தில் , வரும் பாடலில் ”பெற்ற அம்மா அப்பாவுக்காக என்னை விட்டு விட்டாயே உன்னால் எப்படி முடிந்தது . என்னால் முடியவில்லை” என்ற ரீதியில் வரும் வரிகள் பொருத்தம்.
ஆனால் அவள் குற்றவாளி இல்லை என்று தெரிந்த பின் மீண்டும் சேரன் அழும் சோகக் காட்சியிலும மீண்டும் அதே வரிகள் பின்னணியில் ஒலிக்கிறது . இப்போதாவது அதை சரி செய்து இருக்கலாமே சேரன்?
படம் வந்த போது சேரன் அழும் பல காட்சிகளில் ‘அவர் நடிப்பு ஓவராக இருக்கிறது . ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறது’ என்ற விமர்சனம் வந்தது. தியேட்டரில் சில இடங்களில் சிரிப்பொலி கேட்டதும் உண்டு . ஆனால் இப்போது பல ஹீரோக்கள் அழுவது ரொம்பக் கொடுமையாக இருப்பதால் சேரனின் அழுகை, ‘அட நல்லா இருக்கே..!’ என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மலையாளப் படங்களில் தமிழன் என்றாலே திருடன் அயோக்கியன் . அல்பம் , குடிகாரன் , மோசமானவன் , கஞ்சா கடத்துபவன் என்று சம்மந்தமே இல்லாமல், தங்கள் திருக்கல்யாண குணங்களை எல்லாம் தமிழர்கள் மேல் ஏற்றிக் காட்டுவார்கள். தமிழ்ப் படங்களில் கேரள பெண்களை காமெடி மட்டும் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்துவார்கள் .
ஆனால் இந்தப் படத்தில் தயவு தாட்சண்யம் இன்றியும் ஒரு சார்பு இல்லாமலலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது இப்போது முக்கியமாகத் தெரிகிறது.
‘தமிழ் நாட்டில் நிறைய மலையாளிகள் நன்றாக இருக்கிறார்களே என்ற நெகிழ்வு உணர்வு கூட இல்லாமல் கேரள மலையாளிகள் தமிழர் மீது துவேஷம் , வன்மம வஞ்சகம் காட்டுவதையும் , அங்கே சிக்கிக் கொண்ட சில தமிழர்கள் மலையாளியாகவே தங்களை மாற்றிக் கொண்டு தப்பிப்பதையும் ஆட்டோகிராபில் காட்டி இருக்கிறார் சேரன்.
மலையாளக் காதலியிடம் நாயகன் கோவிலுக்கு வரும் ஒரு தமிழ்ப் பெண்மணியைக் காட்டி,”அவங்க எங்க தமிழ்நாட்டுப் பெண். மூக்குத்தி போட்டு இருக்காங்க பாரு . அது தான் தமிழ்ப் பெண்களின் அடையாளம் . எங்கள் பெண்களுக்கு மூக்குத்தி அழகு ” என்று சொல்ல,
கஷடப்பட்டு மூக்குத்திக் குத்திக் கொள்ளும் காதலி. ” இப்ப நானும் தமிழ்ப் பெண்கள் போல அழகா இருக்கேனா/” என்று கேட்பதும் , தமிழ் எழுத்துக்களால் கதாநாயகிக்கு சேலை கட்டி “தமிழ்ப படிக்க ஆசை வந்ததா ?” என்று கேட்பதும அதை விட தைரியமாக “தமிழ் நாட்டின் வெட்கம் வந்ததா என்று கேட்பதும் அதன் பின்னர் தமிழ் நாட்டில் ஒரு படத்திலும் கூட யாரும் வைக்காத காட்சி .

இப்போதும் துல்கர் சல்மான் வரை தங்கள் படங்களில் தமிழ்ப் பெண்களை கேவலமாகக் காட்டிக் கொண்டு இருக்கும் வேளையிலும் இன்று ஒரு தமிழ்ப் படத்தில் சேரன் வைத்தது போல எல்லாம் காட்சி வைத்தால், இப்போது இங்கிருக்கும் சென்சாரும் மேலே இருக்கும் அவர்களது ஆட்களும் விட மாட்டார்கள் என்ற அளவுக்கு இங்கேயே நிலைமை இப்போது சீர்கெட்டு இருக்கிறது.
தன்னை அடிக்க வந்த மலையாள இளைஞர்களை, தனி ஒருவனாக சேரன் முன்னால் நின்று அடிக்க .அப்போது ஒருவன் பின்னால் இருந்து அடிக்கும்போது , ”பின்னால நின்னு அடிக்கிறீங்களே டா கோழைகளா” என்பது…..
”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா?”பாடலில் கதக்களி ஆடிக்கொண்டே வாள் சண்டை போடும் நபரை , தமிழ் சினிமா ராஜாக்கள் கெட்டப்பில் சேரன் வாள் முனையில் தோற்கடிப்பது… இதெல்லாம் இன்றைய இளைஞர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் வேற லெவல்.. சான்ஸே இல்லை… சம்பவம் பண்ணி இருக்கார் சேரன்
ஆரம்பத்தில் தமிழில் இருந்து மலையாளம் உருவாகாத போது ஒட்டுமொத்த நிலமும் தாய்வழிச் சமூகமாக மட்டுமே இருந்தது . பின்னர் கேரளாவுக்கு வெளியே இருந்து வந்த ஆட்களின் உயர்வால் அங்கே நிலைமை மாறியது .
தமிழகம் சீக்கிரம் தாய்வழிச் சமூகத்தில் இருந்து விடுபட்டாலும் கேரளப் பெண்கள் ரொம்ப நாளாக தாய்வழிச் சமூகம் எனும் மரபைக் கட்டிக் காப்பாற்றி வந்தனர். அது பாராட்டுக்குரிய விஷயம்.
ஒரு நிலையில் பெண்களை தாழ்த்தும் மேல் சாதி ஆதிக்க ஆணாதிக்க மனநிலை அங்கும் வளர்ந்தபோது கேரளப் பெண்களை கேரள ஆண்கள் ஒரு பொருட்டாக மதிக்காத நிலை வளர்ந்தது. சமூக அளவில் பெண்கள் மேல் அக்கறை காட்டும் ஆண்கள் அங்கே ஒப்பீட்டளவில் குறைவு
தமிழ்நாட்டில் மட்டும் என்ன வாழ்ந்தது? இங்கும் மேட்டுக்குடி மற்றும் ஆணாதிக்க மனநிலை வளர்ந்தது . அதன் வீரியம் இங்கும் அதிகம் என்றாலும் கூட , தன் வீட்டுப் பெண்ணுக்கு வரும் அவமானம் தனக்கு அசிங்கம் என்று ஆண்கள் கருதினார்கள் .
எனவே ஒரு பக்கம் பெண்களைக் கொடுமைப் படுத்தினாலும் வெளி நபர்களால் அவளுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை விஷயத்தில் எந்த சீர்கேடும் வர விடமாட்டார்கள் . அது ஒரு நிலையில் பெண்களுக்கே நிம்மதி உணர்வைத் தந்தது . மனைவி மேல் கணவனுக்கானஅக்கறை உணர்வு இங்கே அதிகம். எனவே மலையாளப் பெண்களுக்கு தமிழ் ஆண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் . ( தமிழ்ப் பெண்களுக்கு மலையாளப் ஆண்களைப் பிடிப்பதும் உண்டு ஆனால் சதவீதம் கம்மி)
தமிழ் ஆண்களின் இந்த அக்கறையில் மலையாளப் பெண்கள் நெகிழ்வார்கள் . இந்தப் படத்தில் சேரன் , கோபிகாவின் உடையைக் கிழித்த படகை உடனடியாக சரி செய்வது .. அவள் பாடிக் கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து வரும் சத்தம் கேட்காமல் இருக்க , கதவுகளை அடைத்து,புழுங்காமல் இருக்க மின் விசிறி வைப்பது எல்லாம் அவ்வளவு கட்டுப்பாட்டில் உள்ள வீட்டில் இருந்தும் தமிழப் பையனை அவள் காதலிப்பதை மனோதத்துவ ரீதியில் நியாயப்படுத்தும் காட்சிகள் . அபாரம் சேரன் !
படகுப் போட்டியில் கேரளாவில் எவ்வளவு கண்மூடித்தனமாக வன்முறைகள் நடக்கும் என்பதை பூடகமாகச் சொல்லி இருக்கிறார் சேரன்
பள்ளிக் காதல் கல்லூரிக் காதல் என்று எபிசோட் எபிசோட் ஆக முடிக்காமல் கல்லூரிக் காதலியை மீண்டும் போய் பார்ப்பதற்குள் சென்னை தோழி பற்றி காட்டுவது, மேட்டிமையான திரைக்கதை உத்தி
நாயகனை கல்லூரிக் காதலி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் காட்சியில் நீண்ட நாட்களுக்குப் பின் அவள் தமிழ் பேசுவதும், அப்போது பேசப்படும் வசனங்களும் உலகத் தரம் .
காதலுக்கு மேலும் வாழ்க்கை இருக்கிறது என்ற ஆறுதல்… இன்று குறைந்து கொண்டே வரும் உண்மைக் காதலில் தோற்றவர்களுக்கு ஆறுதல்.
இன்றைய மன நிலையில் பார்த்தால் மணப்பெண்ணாக வரும் கனிகா கொஞ்சம் ஓவரா வெட்கப்படுறாரோ என்று தோன்றலாம் . ஆனால் அன்றைக்கு இதுதான் சரி.
அதே நேரம் , இழந்த காதலிகள் கல்யாணத்துக்கு வரும் கடைசி காட்சியில், அந்தக் காட்சி முழுமையும் , அப்படியே ஒட்டு மொத்தமாக கனத்து ஜொலிக்கிறது.
மண்டபம் உள்ளே நுழையும் கிராமத்துப் பள்ளிக் காதலியின் பிரம்மிப்பு,மண்டபம் உள்ளே வரும் கல்லூரிக் காதலியின் நிலை , அவளை , நாயகனின் தோழி எதிர்கொள்ளும் விதம் , அவர்களைப் பார்த்த சோகத்தில் நாயகன் இருக்க, மணமகள் , ” ”ஏன் தாடி வச்சிட்டு இருக்கீங்க? காதல் தோல்வியான்னு என் பிரண்ட்ஸ் கேட்டாங்க” என்று தனது தோழிகள் மேல் பழி போடும் லாவகம் , மனைவியாகப் போகிறவளின் உணர்வுகளை மதித்து உடனே தாடியை எடுப்பது,
கல்யாணப் பரிசாக பணம் உள்ள கவரைத் தரும் பள்ளிக்காலக் காதலி, கை பிடித்து மோதிரம் போடும் கல்லூரிக் காதலி (எவ்வளவு நுட்பமான விஷயம்! பள்ளிக் காதலிகளுக்கு அப்போது எல்லாம் தொடும் தைரியம் வராது.)… அது தப்பாக இருக்கக் கூடாது என்பதற்காக மணமகளுக்கும் மோதிரம் போடுவது , தோழி ஜாலியாக வெறுங்கையோடு போட்டோவுக்கு போஸ் வருவது,
நாயகனின் இரண்டு முன்னாள் காதலிகளும் என்னாளும் தோழியான பெண்ணும் சகஜமாகப் பேசிக் கொண்டு இருக்க, பள்ளிக் காதலியின் பிள்ளையை கல்லூரிக் காதலி கொஞ்சுவது இவற்றை நாயகன் பார்ப்பது .. எல்லாம் இன்னும் அப்படியே புதுசாக இருக்கிறது (பின்னே வேறு யாரும் அந்த ஏரியாவைத் தொட்டு இருந்தால்தானே இது பழசாகும்)
கடைசியில் காதலிகளின் ஏக்கப் பார்வை வீடு வரை கூடவே வந்து தூங்கும்போதும் கண்ணுக்குள் தெரிகிறது .

எளிதாகக் கிடைக்கும் எதுவும் மலினமாகப் போகும். கஷ்டப்பட்டு பெறுவதில்தான் ஈர்ப்பு அதிகம் இருக்கும் .
காலையில் சாட்டிங், மத்தியானம் மீட்டிங் , ஈவினிங் பிக்கப் , காலையில் டிராப் என்று இருக்கும் உலகுக்கு, காதல் என்ற உணர்வின் அர்த்தம் கூடப் புரியாது . மூன்று ரூபாய்க்கு கிடைப்பதால் மூலிகைச் செடி மட்டமானது என்று அர்த்தம் இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு கீழே கிடைக்காது என்பதால் போதைப் பவுடர் உயர்ந்தது என்றும் அர்த்தம் இல்லை.
புரிந்து கொண்டு காதலையோ நட்பையோ கல்யாணத் துணையையோ மதித்தால் எல்லா உறவுகளும் அர்த்தப்படும் கெட்டிப் படும் .
அப்படிப் பார்த்தால் 2004- ஐ விட 2025 இல் தான் ஆட்டோகிராப்களை அழுத்தமாககப் போட வேண்டி இருக்கிறது.
– ராஜ திருமகன்
