மனதை தொடும் காலை உணவு திட்டம் தெலங்கானா மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என மேடையிலேயே உறுதியளித்தார் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற கருபொருளில் 2025-26 கல்வி ஆண்டிற்கான புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட 7 திட்டங்களின் தொடக்க விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 25) மாலை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
தொடர்ந்து விழாவில் அவர் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி.
தமிழ்நாடு கல்வி தந்தை காமராஜரின் மண். அண்ணாதுரை, கலைஞர் மண். தமிழ்நாட்டில் கல்வி வளர அடித்தளம் அமைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். இந்தியாவில் கல்விக்கான ஒரு சிறந்த மாடலை உருவாக்கினார்.
கலைஞரின் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். சிறந்த முதல்வராக திகழும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இந்த நிகழ்ச்சி தமிழக இளைஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.
கல்வி, ஊட்டச்சத்து, விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. இந்திய மாநிலங்கள் அனைவரும் தமிழகத்தின் கல்வி கொள்கையை உற்று நோக்கி வருகின்றனர். தமிழக அரசின் கல்வித் திட்டங்களை நாடே பின்பற்றும் நிலை உருவாகி உள்ளது.
அதில் முக்கியமானது காலை உணவுத் திட்டம். மதிய உணவு திட்டத்தை முதன்முதலில் தொடங்கியது தமிழகம்தான். தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதேபோல கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர்களால் தங்கள் குழந்தைக்கு காலை உணவை கொடுக்க முடியாத சூழலில், அந்தப் பொறுப்பை தமிழ்நாடு அரசே ஏற்றுள்ளது. இத்திட்டம் என்பது மனதை தொடும் திட்டம். இத்திட்டத்தை தெலங்கானா மாநிலத்திலும் அடுத்த கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன்.
அதைபோல தமிழகத்தில் உள்ள நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட கல்வித் திட்டங்களும் வரும் கல்வி ஆண்டு முதல் தெலங்கானாவில் செயல்படுத்தப்படும். இந்த நான்கு திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்தி வரும் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.
தமிழ் மக்களும் தெலுங்கு மக்களும் நூற்றாண்டு காலங்கள் நட்புறவு கொண்டவர்கள். இரு மாநிலங்களும் சமூக நீதியில் ஒரே கொள்கைகளை கொண்டுள்ளன. மாநிலம் தெலுங்கானாவில் கல்விக்கு தான் முன்னுரிமை அளிக்கிறோம். கல்விதுறைக்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தெலங்கானாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பொறியியல் மாணவர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தியா ஸ்கில்ஸ் யூனிவர்சிட்டி என்பதை ஏற்படுத்தி மாணவர்கள் திறனை மேம்படுத்தி வருகிறேன்.
தமிழ்நாட்டை பின்பற்றி, தெலங்கானாவிலும் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு வீரர்களை எங்கள் மாநிலத்துக்கு பயிற்சிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒலிம்பிக் பதக்கம் கிடைக்க பிரதமர் மோடி, அமித் ஷா நடவடிக்கை எடுக்கவில்லை, நாங்கள் தயாராக உள்ளோம். 2028-ல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வெல்வதற்கு இரண்டு மாநிலங்களும் சேர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டுவந்த இட ஒதுக்கீடு மூலம் ஈர்க்கப்பட்டு, தெலுங்கானாவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், 42% ஓபிசி, எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு 27% என 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தப்போகிறேன்” என ரேவந்த் ரெட்டி பேசினார்.