கரூரில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதேபோன்று கடந்த 3ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலும் விசாரணை துவங்கியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே கரூர் சம்பவ வழக்கில் தமிழக அரசுக்கு எதிராகவும், உயர்நீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாகவும் கூறி ஊடகவியலாளர்களும், தவெக நிர்வாகிகளும் போலீசாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேதாஜி மக்கள் கட்சி தலைவரும், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியுமான வரதராஜனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக உயநீதிமன்ற நீதிபதியை விமர்சித்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரபல யூடிபர்களான பெலிக்ஸ் ஜெரால்டு மற்றும் மாரிதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் பெலிக்ஸ் ஜாமினில் வெளிவந்த நிலையில், மாரிதாஸ் போலீஸ் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
அதேபோன்று நீதிபதியை விமர்சித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன்(25), கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட்(25), சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி சசிகுமார் (48), தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ்(37) ஆகியோரும் சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.