கரூர் சம்பவ விவகாரத்தில், “பிணத்தின் மீது அரசியல் செய்பவர்கள் (அண்ணாமலை) இதுபோன்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இன்று (செப்டம்பர் 29) கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கரூர் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்தான கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை, பிணத்தின் மீது அரசியல் செய்பவர்கள் இதுபோன்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள், இந்த அரசியல் அநாகரிகமான அரசியல். 40 பேர் உயிரிழந்துள்ளனர், அப்படி இருக்கும் பொழுது இது போன்ற எண்ணங்கள் வருமா? இதுபோன்ற எண்ணங்கள் வந்தால் சிறந்த அரசியல் தலைவர்களாக இருக்க முடியுமா?. விசாரணை ஆணையம் உள்ளது. உண்மை எல்லாம் வெளியில் வரும். அப்பொழுது யார் மீது தவறு என்று தெரியும். விசாரணை முடியட்டும். விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடப்படும் அதன் பிறகு நாம் பேசுவோம். எடுத்தோம் கவிழ்த்தோம் என அரசியல் தலையீடு என்று பேச வேண்டாம்.
நாங்களும் யாரையும் குறை சொல்லவில்லை, மிகப்பெரிய மரணம் நடந்து துயரத்தில் இருக்கிறோம் இந்த சூழலில் மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.
தவெக தலைர் விஜய் மற்றும் நிர்வாகிகளும் கரூர் சென்று பார்க்காதது குறித்தான கேள்விக்கு, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என பதிலளித்தார்.
இந்த ஆணையத்தால் எந்த தீர்வும் வராது என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிசாமி இதே அருணா ஜெகதீசன் அவர்களை தான் நியமித்தார். அவர்கள் எந்த நம்பிக்கையில் நியமித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியின் பொழுதும் அருணா ஜெகதீசனை ஆணையத்தின் தலைவராக நியமித்தார்களா இல்லையா? அப்பொழுது நீதி கிடைக்காது என்று அவர்கள் நியமித்தார்களா? இதனை முதலில் அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை கேட்க சொல்லுங்கள் அதன் பிறகு நான் பதிலளிக்கிறேன் என்றார்.