திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை.. மாவட்ட காங். தலைவர்கள் கூட்டம் தீர்மானம்

Published On:

| By Mathi

DMK Congress

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசினால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் இன்று முகப்பேர் கிழக்கு, எஸ்.கே.வி மஹாலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில்

  • அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
  • சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ
  • அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்
  • அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே
  • நிவேதித் ஆல்வா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீர்மானம் விவரம்: சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சட்டமன்ற நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் இக்கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறார்கள்.

அதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இக்கூட்டணி குறித்து பொதுவெளியிலோ, ஊடகங்களின் வாயிலாகவோ எவரும் எவ்விதக் கருத்தும் கூறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், அதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியில் சிலர் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிற வகையில் கருத்து கூறுவதை தவிர்த்திருக்க வேண்டும்.

ஆனால், கட்சி கட்டுப்பாடுகளை மீறி கருத்துகள் கூறப்படுவதால், கூட்டணி கட்சிகளிடையே இணக்கமற்ற சூழல் ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியின் நலன் பாதிக்கப்படும் என்று இக்கூட்டம் கருதுகிறது.

எனவே, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின்படி, திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share