எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் தனி நபர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
மக்களவையில் நேற்று (பிப்ரவரி 11) பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தத்தின் மூலம் நமது பாரத மாதாவை விற்றுவிட்டனர். நமது நாட்டை விற்க மோடிக்கு வெட்கமாக இல்லையா? டிரம்புக்கு மோடி அடி பணிந்துவிட்டார்” என்று காட்டமாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு, ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 12) பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக தனி நபர் தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகாந்த் துபே, ‘நாட்டை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ள ராகுல் காந்திக்கு நிதி வழங்குவது யார்? நரவணேவின் வெளியிடப்படாத புத்தகம் அவர் கைக்கு எப்படி வந்தது? .
பாதுகாப்பு, நிதி, வர்த்தகம், வெளியுறவு என எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தை அவதூறு செய்யும் நோக்கத்துடன் ராகுல் காந்தி சர்ச்சையை உருவாக்க முயற்சிப்பது இது முதல் முறையல்ல.
நமது நாட்டை பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.
ராகுல் காந்தியின் இந்த முயற்சிகள் அனைத்தும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற கௌரவமான பதவியைப் போர்வையாகப் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டை உள்ளிருந்தே சீர்குலைக்கும் முயற்சியைத் தவிர வேறில்லை.
எனவே அவரை எம்.பி.பதவியில் இருந்து நீக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன்” என்று கூறினார்.
இதற்கிடையே நாடாளுமன்ற வளாகத்தில், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
