கோவையில் தொடங்கிய சிஐடியு மாநாட்டில் SIR க்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு தொடங்கியது. இன்று தொடங்கிய மாநாடு வரும் நவம்பர் 9-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. மாநாட்டில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மாநாட்டு ஸ்தூபிக்கு மலர் தூவி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
முதல் நாள் நிகழ்வில், அகில இந்திய துணைத் தலைவர் சி.பத்மநாபன் வரவேற்புரை ஆற்றினார். மாநிலத் தலைவர் அ. சௌந்தரராஜன் தலைமை உரையாற்றினார். அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் தொடக்க உரை நிகழ்த்தினார். இந்த மாநாட்டில் சிஐடியு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த CITU மாநில தலைவர் சவுந்தரராஜன், இந்த மாநாட்டில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளோம். மேலும் உலகளவில் பின் தங்கிய ஏகாதிபத்திய நாடுகளில் ஏற்பட்டு வரும் தொழிலாளர் பிரச்சனை, வேலையின்மை, வறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் தொழிலாளி வர்க்கம் தலையிட வேண்டும் என்ற முடிவை மீண்டும் இந்த மாநாட்டில் வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு உலகமயம் என்ற கொள்கையை கைவிட்டு விட்டார். ஆனால் ஒரு காலத்தில் வக்காலத்து வாங்கியது அவர்கள் தான். தற்பொழுது டிரம்ப் ஒரு நிழல் யுத்தத்தை துவக்கி பல்வேறு நாடுகளுக்கு நெருக்கடிகளை தருகிறார். அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களை நிரந்தரமற்றவர்கள் ஆக்க வேண்டும். தொழிற்சங்கங்கள் இருக்கக் கூடாது என்பதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் முயற்சிப்பதாக தெரிவித்தார். இந்தியாவிலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கடுமையாக அதற்கு முயற்சிக்கிறது என தெரிவித்தார்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொண்டு வந்துள்ள சட்ட தொகுப்பு இந்தியாவில் இருக்கக்கூடிய உற்பத்தி தொழிற்சாலையில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகளை எந்த சட்டமும் பொருந்தாதவர்கள் என்று ஆக்குவதற்கு முயல்வதாக குற்றம் சாட்டினார். இது போன்ற ஒரு செயலை வெள்ளைக்காரர்கள் கூட செய்தது கிடையாது. இதற்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் அழுத்தம் தான் காரணம் என்றார்.
தற்பொழுது பாஜக கொண்டு வந்துள்ள சிரம் சக்தி நீதி என்பது மிக மோசமான தொழிலாளர்கள் கொள்கை . இது அவரவர் குல தொழிலை செய்ய வேண்டும் என்பதற்காக கொண்டு வருவதாகவும், ஜனநாயகத்தை அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது என்றார்.
மேலும் இந்திய தொழிலாளர்கள் மாநாடு மோடி வந்ததன் பிறகு நடைபெறவில்லை. எவ்வளவு வலியுறுத்தினாலும் அந்த மாநாட்டை நடத்துவதற்கு அவர்கள் மறுப்பதாக தெரிவித்தார். தற்போது கோடிக்கணக்கான படித்த இளைஞர்கள் எந்த ஒரு பணி பாதுகாப்பும் இல்லாமல் வேலை வாங்கப்படுகின்றனர் என்றார்.
மேலும் சிஐடியு மாநட்டில் SIR ஐ கைவிடப்பட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றி இருப்பதோடு, அதை எதிர்த்து செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகளுடன் இணைந்து வலுவாக போராடுவது என்று தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
