ரேபிஸ் நோயால் இறந்தவர்களை திருப்பிக் கொண்டு வர முடியுமா என்று விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டெல்லியில் தெரு நாய் கடியால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்வது.
இந்த வழக்கு நீதிபதி பரிதிவாலா மற்றும் மகாதேவன் அமர்வில் இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய சொல்லிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தெரு நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிலருடன் பேசியதாகவும் அவர்கள் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் அவர், “தெரு நாய்களை இடமாற்றம் செய்வதற்கு டெல்லியில் தனியே ஒரு இடம் ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் தடை உத்தரவு பெற்றுள்ளதால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது” என்றும் தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ரேபிஸ் நோயால் இழந்தவர்களை திருப்பிக் கொண்டு வர முடியுமா என்று விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு கேள்வி எழுப்பினர்.
தெரு நாய்கள் பிடிக்கப்படுவதை தனிநபரோ அல்லது அமைப்போ தடுத்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்தனர்.
மேலும், ”டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும்.
டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி நாய் காப்பகங்களை உருவாக்க வேண்டும். பிடித்து அடைக்கப்படும் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்பாக தினசரி பதிவை பராமரிக்க வேண்டும்.
ஒரு தெரு நாயை கூட விட்டு விடக்கூடாது. நாய்க்கடி குறித்து புகார் அளிக்க ஒரு வாரத்திற்குள் உதவி எண் அறிவிக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரங்களையும் வெளியிட வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.