டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் நேற்று மாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு செங்கோட்டை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நேற்று மாலை 6.52 மணிக்கு நின்று கொண்டிருந்த ஹுண்டாய் ஐ 20 கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்வத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து விசாரணை அமைப்புகளும் விசாரித்து வருகின்றன.
இந்த நிலையில், தில்லி கார் வெடிப்பு சம்பவம் சதி செயலாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்த நிலையில் உபா(UAPA) சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தாரிக், அமீர் ரஷீத், உமர் ரஷீத் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தி இருக்க கூடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய காரை ஓட்டிய உமர் நபி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த காரை ஓட்டி வந்த உமர் என்பவரின் தாய் மற்றும் சதோதரரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டையில் மூன்று நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதேபோல் பாதுகாப்புக் கருதி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ நிலையமும் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
