ஒரே கதை; ஒரே ஹீரோ.. ஒரு படம் வெற்றி ; மற்றொன்று தோல்வி – ஏன்?

Published On:

| By Minnambalam Desk

Reasons for the success or failure of Karthik's films

நவரச நாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வந்த படம் நந்தவன தேரு . இந்தப் படத்தின் கதை.. கார்த்திக் ஒரு திருடர் . திருடப் போன இடத்தில் ஒரு பெண்ணை சந்திப்பார் . அந்த பெண்ணை சொத்துக்காக சில உறவுகள் கொலை செய்ய முயல்வது கண்டு அவளை மீட்டு வருவார். அவளுக்கு பாடகியாக ஆசை இருப்பதைக் கண்டு பிடித்து அவளை கஷ்டப்பட்டு பெரிய பாடகி ஆக்குவார் . உள்ளுக்குள் அவளைக் காதலிப்பார். ஆனால் அவள் ரசிகனாக வந்த ஒரு நபரைக் காதலிக்க …

இப்போ அடுத்த படம்.

ADVERTISEMENT

அதே நவரச நாயகன் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, விக்ரமன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வந்த படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். . இந்தப் படத்தின் கதையிலும் கார்த்திக் ஒரு திருடர் . இந்தப் படத்திலும் திருடப் போன இடத்தில் ஒரு பெண்ணை சந்திப்பார் . அந்த பெண்ணை அவளது உறவுகள் கொடுமைப்படுத்தி அடிமையாக வைத்திருப்பது கண்டு அவளை மீட்டு வருவார். இந்தப் படத்திலும் அவளுக்கு பாடகியாக ஆசை இருப்பதைக் கண்டு பிடித்து அவளை கஷ்டப்பட்டு பெரிய பாடகி ஆக்குவார் . இந்தப் படத்திலும் உள்ளுக்குள் அவளைக் காதலிப்பார். ஆனால் இப்போது அவள் உறவினர்கள், அவளுக்கு தங்கள் உறவிலேயே வேறு பையனைப் பார்த்து திருமணம் நிச்சயம் செய்ய…

நந்தவனத் தேரு படம் வெற்றி பெறவில்லை

ADVERTISEMENT

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பெரிய ஹிட் .

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் கதையை கார்த்திக்கிடம் விக்ரமன் சொல்லும்போது , கார்த்திக் தனக்கே உரிய பாணியில் இதே மாதிரிதான் நந்தவனத் தேரு பண்ணேன் . ஓடல. இது சரிவராது ” என்று கூறி இருக்கிறார். ஆனால் விக்ரமன் அவரை கன்வின்ஸ் செய்து படம் எடுத்தார் படம் ஓடியது.

ADVERTISEMENT

ஏன் எதற்கு எப்படி?

நந்தவனத் தேரு படம் சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸ் படத்தின் இன்ஸ்பிரேஷனில் எழுதப்பட்டது. அதில் கார்த்திக் கஷ்டப்பட்டு அவளை பாடகியாக்கினால் அவள் யாரோ புதிதாக வந்தவனைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். திருமணத்துக்கு முன்பு தான் அந்தப் பெண்ணுக்கு கார்த்திக் தன் முறைமாமன் என்பதே தெரியும் . அவள் கணவனோடு போய் விட , கார்த்திக் அம்போ என நிற்பார். அதுவரை அவளைத் திட்டிய பக்கத்து வீட்டு விதவை அவர் மேல் அனுதாபப்படுவதோடு , அந்தப் படம் முடியும்.

மாறாக உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் கதாநாயகியின் உறவினர்கள் அவர்கள் உறவுக்கார இளைஞனையே (அஜித் நடித்த கதாபாத்திரம்) அவளுக்கு நிச்சயம் செய்தாலும் ஒரு முக்கியமான சமயத்தில் கார்த்திகை விட முடியாது என்று காதல் என்பதே நன்றி உணர்வுதான் என்று முடிப்பார் .

அந்தக் காட்சியில் கார்த்திக் நடிப்பு சும்மா பட்டையைக் கிளப்பும்

காலம் மாறியதைப் புரிந்து கொள்ளாமல் சார்லி சாப்ளின் காலத்துக் கதையில் வந்தது நந்தவனத் தேரு .

‘காதலில் பலன் இருக்க வேண்டும் ; தியாகம் எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்ற ரசிகனின் மனோநிலையைப் புரிந்து கொண்டு ரசிகர்களுக்குப் பிடித்த கிளைமாக்சில் வந்த படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.

ஒரு படத்துக்கு கிளைமாக்ஸ் எப்படி வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதற்கு நந்தவனத் தேருவும் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேனும் பெரிய உதாரணங்கள்.

இப்படி தப்பாக முடிக்கப்பட்ட படங்களை எல்லாம் சரி செய்து திரும்ப எடுத்தாலே வெற்றிப் படங்கள் எடுக்கலாம்தான் . ஆனால் கதைத் திருட்டு வழக்கில் சிக்கிக் கொண்டால் நிர்வாகம் அதற்குப் பொறுப்பு ஏற்காது

– ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share