தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று (ஆகஸ்ட் 13) திமுகவில் இணைந்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைவரின் ஆணைக்கிணங்க இன்றைக்கு அவரடஹு தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை நான் இணைத்துக் கொண்டுள்ளேன்.
தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கிறது என்ற ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் அந்தந்த துறைகளில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் மூலமும் மிகத் தெளிவாக தெரிகிறது. தமிழகம் இன்று பல விஷயங்களில் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் நலம் சார்ந்த விஷயங்களை நிறைவேற்றுவதிலும் தலைவர் கலைஞரின் மாநில சுய ஆட்சி முழக்கத்தினை தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து, அனைத்து மாநிலங்களின் நலனையும் காக்கக்கூடிய வகையில் தலைவர் இன்றைக்கு களத்தில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் என்னையும் முதல்வர் ஸ்டாலினின் சிப்பாய்களில் ஒருவராக இணைத்துக் கொள்ளும் வகையில் அவரின் அனுமதி பெற்று இன்றைக்கு நான் கழகத்தில் இணைந்திருக்கிறேன். 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி என்பது என்பது ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒன்று. நிச்சயமான ஒன்று.
நாளை மறுநாள் முதல்வர் கோட்டையில் சுதந்திர கொடியை ஏற்றி வைக்க இருக்கிறார். அடுத்த ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மீண்டும் அவர்தான் கோட்டையில் கொடி ஏற்றுவார். எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. நடைபெற இருக்கும் 2026 தேர்தல் இரண்டாவது இடத்திற்கு யார் வருவார்கள் என்பதற்கான தேர்தல் தான் என்று நான் கருதுகிறேன் என்றார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். ஆனால் அந்த கூட்டணியை அறிவித்ததே மத்திய அமைச்சர் அமித்ஷா தான். அது மட்டுமல்ல அமித்ஷா அறிவிக்கும்போதே கூட்டணி ஆட்சி என்றும் குறைந்தபட்ச செயல் திட்டம் என்றும் தெரிவித்துள்ளார். எதில் குறைந்த பட்ச செயல்திட்டம் வரும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மொழிக் கொள்கை, இரு மொழி கொள்கை, தேசியக் கல்வி, மாநிலக் கல்வி, தமிழகத்திற்கு நிதி உதவிகள் மறுக்கப்படுவது போன்றவற்றில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு ஏற்பட கூடிய ஓரவஞ்சனை… இப்படி பல விஷயங்களில் எந்த அடிப்படையில் அவர்களிடையே ஒருமித்த கருத்து வரப்போகிறது. எதில், குறைந்தபட்ச செயல்திட்டம் வரப்போகிறது என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது.
மனப் புழுக்கத்தில் நிர்வாகிகள்
அதிமுகவில் பல குழப்பங்கள் இருக்கிறது. பல நிர்வாகிகள் அங்கு மனப் புழுக்கத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.
எனக்கு அமைப்புச் செயலாளர் என்ற பதவி கொடுத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான், நான் அங்கிருந்து வெளியே வந்தேன். சமீபத்தில் அன்வர்ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்த நிலையில் இன்று நான் திமுகவில் இணைந்துள்ளேன்.
தமிழகத்தின் வரலாற்றில் கூட்டணிகள் வருவது சகஜம். ஆனால் திராவிட இயக்கத்தைச் சார்ந்த ஒரு கட்சி, பெரும்பான்மை பலத்தை கொண்டிருக்கும் ஒரு கட்சி தான் கூட்டணியை முடிவு செய்யும். திமுக கூட்டணியில் அதன் தலைவர்தான் முடிவு செய்வார். ஆனால் அதிமுகவில் இன்று முடிவு செய்யக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது.
டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் இன்று அதிமுகவில் இருக்கும் தலைமை உள்ளது. தமிழக மக்கள் என்ன நினைப்பார்கள் என்றால் ஒருவேளை அதிமுக ஆட்சி நாளைக்கு வந்தது என்றால் அதில் பிஜேபியின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும். மத்திய அரசின் தலையீடு எந்த அளவில் இருக்கும் என்பதை யோசிப்பார்கள்.
எனவே திமுக ஆட்சி தொடர்வதற்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயமாக 200 தொகுதிகளைத் தாண்டி வெற்றி பெறுவோம். அதில் எந்த வித ஐயமும் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தவறான வாதம்
தொடர்ந்து கட்சிகள் மாறிவிட்டோம் என்று சொல்வது தவறான வாதம். நான் ஒரு இயக்கத்தில் இருக்கிறேன். அந்த இயக்கத்தில் நான் சந்தோசமாக இருந்தால் நிச்சயம் மாற மாட்டேன். ஆனால் பிரச்சனைகள் வரும்போது அந்தப் புழுக்கத்திலேயே அந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது. எனவே அடுத்த இலக்கை நோக்கி நாம் செல்வோம்.
ஊர்க்குருவி பருந்தாகாது
கூட்டிவரப்பட்ட கூட்டத்தைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி ஒரு எம்ஜிஆர் போலவோ அம்மாவைப் போலவோ தன்னையும் ஒரு பெரிய தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்றார்.