கன்னட மொழியில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா பின்னர் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். rashmika and anushka clash get buzz in tollywood
’அனிமல்’, ‘புஷ்பா 2’ வெற்றிக்குப் பிறகு நாடு முழுவதும் கொண்டாடப்படுகிற நாயகியாக உயர்ந்திருக்கிறார். நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கிற ’தி கேர்ள்ப்ரெண்ட்’ படத்தில் இடம்பெற்ற ‘நதியே’ பாடல் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், விக்ரம் பிரபு உடன் இணைந்து அனுஷ்கா ஷெட்டி நடிக்கிற ‘ஹாடி’ திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.
கிரிஷ் ஜகர்லமுடி இயக்கும் அப்படம் இம்மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொன்னது படக்குழு. அப்படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.இந்த நிலையில், ‘ஹாடி’ வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று ரிலீஸ் ஆகும் என்று தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.
அவ்வாறு நிகழ்ந்தால், ஹீரோயின்களை மையமாகக் கொண்ட இரு படங்கள் ஒரே நாளில் நேருக்கு நேர் மோதுகிற சூழல் உருவாகும். இரண்டுமே தெலுங்கு படங்கள் என்றாலும் தமிழ், கன்னடம், இந்தியிலும் அவை வெளியிடப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஒருவர் இன்றைய ‘நேஷனல் க்ரெஷ்’ ஆக இருக்கிறார்.
இன்னொருவரோ கடந்த காலத்தில் அந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தவர். ஆக, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று ரசிகர்கள் சொல்ல வேண்டியதுதான் பாக்கி..!