தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார், இன்று (மார்ச் 19) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
முன்னதாக, பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய ரஞ்சனா நாச்சியார், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில், தவெக தலைவர் விஜய் தொடர்பான சில தனிப்பட்ட நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகின. குறிப்பாக, ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் நடிகை திரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் ஒரே காரில் வந்து கலந்துகொண்டது, கட்சித் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சிலர் சமூக வலைதளங்களில் விஜயை பின்தொடர்வதை நிறுத்தினர்.
மகளிர் தின விழாவில் பேசிய விஜய், தன்மீதான விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு, “அது அவ்வளவு வொர்த் (worth) இல்லை” என்று தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு ரஞ்சனா நாச்சியார் கடும் கண்டனம் தெரிவித்தார்.”எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா? அடுத்த குழந்தைக்குத் தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா?” என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினார். இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமையுடனான இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக தவெகவிலிருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார், இன்று திமுகவில் இணைந்தார். இணைப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”திராவிட இயக்கத்தில் இணைந்து கொள்வதை பெருமையாகக் கருதுகிறேன். பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியாலும் வழங்க முடியாது என்பதை உணர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
