ஆக. 17-ல் ராமதாஸ் பாமக பொதுக்குழு; ஆக. 9-ல் அன்புமணி பாமக பொதுக்குழு!

Published On:

| By Mathi

PMK GC Ramadoss Anbumani

பாமகவின் சிறப்பு பொதுக்குழு ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்; ஆனால் ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் (செயல்) தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், (செயல்) தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நீடிக்கிறது. பாமகவின் செயல் தலைவராக மட்டுமே அன்புமணி நீடிக்க முடியும் என்கிறார் ராமதாஸ். ஆனால், தேர்தல் ஆணையத்தின் படி தாமே பாமகவின் தலைவர் என்கிறார் அன்புமணி.

இந்த நிலையில் பாமகவின் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் அறிவித்தார்.

பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ் உத்தரவுக்கிணங்க, பாமகவின் சிறப்பு பொதுக்குழு ஆகஸ்ட் 17-ந் தேதி புதுச்சேரி – திண்டிவனம் செல்லும் சாலையில் பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெறும்; மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பகுதி, தலைவர், செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு போட்டியாக ஆகஸ்ட் 9-ந் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9-ந் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளுயன்ஸ் அரங்கில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பாமகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமப்டி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share