பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதியாக நீடித்து வரும் மோதல் தற்போது குடும்ப விவகாரமாக விஸ்வரூபமெடுத்துள்ளது.
ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இருவரும் தனித் தனியே நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவது. பொதுக்குழு நடத்துவது என இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவும் 16 குற்றச்சாட்டுகளும்
கடந்த 17ஆம் தேதி வானூரில் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை கொடுத்தது. இந்த கேள்விகளுக்கு 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு அன்புமணிக்கு ராமதாஸ் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் மீண்டும் தைலாபுரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. அப்போது, ஓழுங்கு நடவடிக்கை குழுவின் கேள்விகளுக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராமதாஸ் மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கும் இதுவரை அன்புமணி பதிலளிக்கவில்லை.
இப்படி இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், தற்போது குடும்ப ரீதியாகவும் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ராமதாஸ் 2-வது மனைவி சுசிலா விவகாரம்
அதாவது, கடந்த ஜூன் 24ஆம் தேதி ராமதாஸ் தனது முதல் மனைவி சரஸ்வதியுடன் 60ஆவது திருமண நாளை கொண்டாடினார். தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி இரண்டாவது மனைவி சுசிலாவுடன் 50-வது திருமண நாளை ஈசிஆர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடினார்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. சமூக வலைதளங்களில் கமெண்டுகளும் குவிந்தன. இது அன்புமணி – ராமதாஸ் குடும்பத்தினருக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முதல் மனைவி சரஸ்வதியின் சமாதான முயற்சிகள்
இதுதொடர்பாக தைலாபுர வட்டாரத்தில் விசாரித்தபோது, “அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பிரச்சினையை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அன்புமணியின் தாயார் சரவஸ்வதி முயற்சித்து வருகிறார்.
கடந்த 28ஆம் தேதி அன்புமணி – சௌவுமியாவின் 34ஆவது திருமண நாள் வந்தது. இதையொட்டி ராமதாஸை அழைத்துக் கொண்டு சென்னை சென்று அன்புமணி-சௌமியா தம்பதிகளை வாழ்த்த திட்டமிட்டார் சரஸ்வதி.
இதற்காக தனது கணவர் ராமதாஸிடம் பேசினார். “நாம நேரடியாக போய் பிள்ளைய வாழ்த்தனும்” என்று கேட்க, அதை ராமதாஸ் மறுத்துவிட்டார்.
இதனால் கோபமான சரஸ்வதி, “நாம அன்புமணிய நேர்ல ஆசிர்வதிக்கணும்… பிள்ளைக்கு எதிராக நீங்க கட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தீங்கனா நான் என்ன செய்வேனு தெரியாது… எந்த முடிவை வேண்டுமானாலும் எடுப்பேன்… எந்த எல்லைக்கும் போவேன்’ என்று கோபமாக பேசினார்.
இதனால் ராமதாஸும் மனம் இறங்கி வந்தார். ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள அன்புமணி வீட்டுக்கு சரஸ்வதியும் ராமதாஸும் செல்ல தயாரானார்கள்.
இந்த தகவலை அன்புமணிக்கு தொடர்பு கொண்டு சொன்னார் சரஸ்வதி. ஆனால் அன்புமணி, ’நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி திருப்பதி கிளம்புகிறோம். 28ஆம் தேதி திருப்பதியில் சாமி கும்பிட்டுவிட்டு 29ஆம் தேதி சென்னை வந்துவிடுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதனால் 28ஆம் தேதி காலை ராமதாஸ், சரஸ்வதி இருவரும் ஒன்றாக சென்னை கிளம்பும் திட்டம் ரத்தானது. ஆனால் மதியம் ராமதாஸை மட்டும் சென்னைக்கு அனுப்பி வைத்தார் சரஸ்வதி.
சென்னை வந்த ராமதாஸ் மகள் கவிதா வீட்டில் தங்கினார். இதற்கிடையே மகள்கள் ஸ்ரீகாந்தி, கவிதாவிடமும் சரஸ்வதி பேசினார். ‘நீங்கள் இரண்டு பேரும், அப்பாகிட்ட பேசி எப்படியாவது இருவரையும் இணைய வைங்க… இப்படியே போனா பெரிய பெரிய பிரச்சினைகள் வரும்’ என்று கூறினார்.
ஜிகே மணியின் சமாதானப் பேச்சுவார்த்தை
அதேபோன்று ஜி.கே மணியிடமும் தொடர்புகொண்டு, ‘ஐயா வருவாரு… இரண்டு பேரையும் சேர்த்து வைக்க இணக்கமாக பேசுங்கள்’ என்று பேசினார்.
இதை கேட்ட ஜி.கே.மணியும் தன்னால் தான் இருவரும் பிரிந்திருக்கிறார்கள் என்று வெளியில் பேசுகிறார்கள். இந்த அவப்பெயரை எப்படியாவது துடைக்க வேண்டும் என்று வருத்தமடைந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை மகள் ஸ்ரீகாந்தியை அழைத்துக்கொண்டு வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜி.கே.மணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராமதாஸ்.
அப்போது அவரிடம், ‘ஐயா, நீங்களும் அன்புமணியும் ஒன்றாக இருப்பதுதான் நல்லது. நீங்கள் பிரிந்து இருப்பதால் நிர்வாகிகள் தொண்டர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க’ என்று ஜி.கே.மணி கேட்டார்.
இதனால் டென்சன் ஆன ராமதாஸ், ‘என்னை எந்தளவுக்கு அவமான படுத்தணுமோ, அந்த அளவுக்கு அவமானப்படுத்திவிட்டார். இதுவரை நான் பாதுகாத்து வந்த என்னுடைய கௌரவத்தை கெடுத்துவிட்டார். அந்த போட்டோக்களை வெளிப்படையாக போட்டு அசிங்கப்படுத்திவிட்டார். எனக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. என்னை ஐயா என்று சொன்னவர்கள்… இப்போது ராமதாஸ் என்று அழைக்கிறார்கள். இனி செத்தாலும் என் முகத்தில் அவர் முழிக்கக்கூடாது’ என்று கோபப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்புமணி, ஜி.கே.மணியை சந்தித்தார். அவரிடமும் ஜி.கே.மணி கண் கலங்கி சமாதானம் பேசினார். ‘உங்கள் பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது. நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் விருப்பப்படுகிறேன். நீங்கள் பிரிந்திருப்பது கட்சிக்குதான் பின்னடைவை ஏற்படுத்தும்” என்று சொன்னதும்,

அன்புமணி, ‘இவ்வளவு காலம் யாராவது பேசினார்களா… இப்போது வெளிப்படையாக போய் இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடுகிறார். அந்தம்மா(சுசிலா) நேரடியாக அரசியலில் தலையிடுகிறார். கட்சியில் பொறுப்பு போடுவதில் இருந்து எம்.எல்.ஏ சீட் கொடுப்பது வரை அவர்தான் ஆதிக்கம் செலுத்துகிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இவர் வெளிப்படையாக போனதால் தான் போட்டோகளை எல்லாம் சமூக வலைதளங்களில் போடுகிறார்கள். கிண்டல் கேலியாக பேசுகிறார்கள். இனி சமாதானத்துக்கு என்ன இருக்கிறது. அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்’ என்று பேசிவிட்டு கிளம்பினார்.
பாமகவை கைப்பற்றுகிறாரா 2-வது மனைவி சுசிலா?
இதுவொரு பக்கமிருக்க டாக்டரின் இரண்டாவது மனைவியாக பேசப்படும் செவிலியர் சுசிலா, லட்சங்களில் துவங்கி கோடிகள் வரையில், பாமக எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என பாமகவில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு கடன் கொடுத்து அவர்களிடமிருந்து சொத்துகளையும் எழுதி வாங்கியுள்ளார், அதனால் ஏதாவது பிரச்சினை என்றால் இவர்கள் சுசிலா பக்கம்தான் நிற்பார்கள் என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

இதனால் அன்புமணியின் அரசியலுக்கு பாதிப்பு வருமோ என்ற அச்சமும் எழுந்துள்ளதால், கட்சியை காப்பாற்றுவதற்காக ராமதாஸுடன் இருக்கும் நிர்வாகிகளுடன் அன்புமணி பேசி வருகிறார்.

இப்படி, ராமதாஸ் – சுசிலா 50ஆவது திருமண நாள் புகைப்படம் – வீடியோ வெளியே பகிரப்பட்டதால் தந்தையையும் மகனையும் சேர்த்து வைக்க வேண்டுமென்ற சரஸ்வதியின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டன.
பரபரக்கும் திண்டிவனம்- போட்டி கூட்டங்கள்
இந்த நேரத்தில் தைலாபுர தோட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) சமூக ஊடக பேரவை கூட்டம் நடக்கிறது. அதில் தன்னை பற்றி சோஷியல் மீடியாவில் பேசுவதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என ஆலோசிக்க திட்டமிட்டிருக்கிறார் ராமதாஸ்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 1ஆம் தேதி பாமக நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டுகிறார். அதில், அன்புமணி இதுவரை அந்த 16 கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்காதது தொடர்பாக ஆலோசித்து அவருக்கு, ‘உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார்” என்கிறார்கள்.
ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் குழு கூட்டம் நடக்கும் அதே நாளில் திண்டிவனத்தில் உரிமை மீட்பு நடை பயணத்தை அன்புமணி தொடங்குகிறார்; நாளை மாலை பொதுக்கூட்டமூம் நடத்துகிறார். அன்புமணி அணியும், ராமதாஸ் அணியும் ஒரே நாளில் திண்டிவனத்தில் கூடுவதால் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.