பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் எனக்கு ஓய்வே கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் – மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியினர் இரண்டாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கார்டியோ ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
ராமதாஸ் மருத்துவமனையில் இருக்கும் படங்களை படங்களை ஜி.கே.மணி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 7) ராமதாஸ் சிகிச்சைக்கு பின் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, “எனக்கு ஓய்வே கிடையாது. உடல் நிலை எல்லாம் நன்றாக இருக்கிறது; குறையேதும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
முன்னதாக மருத்துவமனைக்கு சென்று திரும்பிய அன்புமணி ராமதாஸ் கூறுகையில், “ஐயா ஐசியுவில் இருப்பதால் அவரை பார்க்கவில்லை” என்று தெரிவித்திருந்தார். ஆனால் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அவரை நேரில் சந்தித்தது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.