திமுக கூட்டணியில் ராமதாஸ்? விசிக விமர்சனத்துக்கு காங். பதிலடி!

Published On:

| By Mathi

DMK Alliance

திமுக கூட்டணியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இடம் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை எப்போதும் கருத்து தெரிவிக்கவில்லை என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் ஐடி-விங் தலைவர் நபில் அகமது கூறியுள்ளதாவது: மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவர்கள், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கூட்டணி விவகாரங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும், பொறுப்புடனும் எடுத்துரைத்திருந்தார்.

ADVERTISEMENT

அந்தச் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணியில் எந்த அரசியல் கட்சி சேர வேண்டும் அல்லது சேரக் கூடாது என்பது குறித்து அவர் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என அவர் கூறியதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை, உண்மைக்கு புறம்பானவை மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளாகும்.

உண்மையில், தமிழ்நாட்டின் அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு தலைமையாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலேயே எடுக்கப்படும் என்பதையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில், உண்மையை முழுமையாக அறிந்து கொள்ளாமல், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி அவர்கள் கண்டனம் தெரிவித்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

கூட்டணிக் கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவு, பரஸ்பர மரியாதை மற்றும் அரசியல் நாகரிகத்தைப் பேண வேண்டிய இத்தகைய காலகட்டத்தில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் தவறான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை வெளியிடுவது, கூட்டணியின் ஒற்றுமைக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலானதாகும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் கூறாத கருத்தை கூறியதாகப் பரப்பி, அதனை அரசியல் நோக்கத்துடன் திரித்து விளக்கி, உண்மை அறியாமல் கண்டனம் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

ADVERTISEMENT

எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கும், அத்தகைய செய்திகளை பரப்பியவர்களுக்கும் எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தமிழக காங்கிரஸ் ஐடி விங் தலைவர் நபில் அகமது தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share